Monday, October 3, 2016

தொலைதூரம்
என்றால்
எல்லாமே
தொலைந்து போன
தூரத்திலிருந்து தான்
என்றான அர்த்தமல்ல

கண்களுக்குள் வராத தூரம்
மழையோ
சுவரோ
வீதியோ
சாதியோ
எதுவாக வேண்டும் இருக்கலாம்
எனக்கு எல்லாமே தூரம் தான்
பல மைல்களுக்கு அப்பால்
ஆனாலென்ன
பல ஊர்களுக்கும் அப்பால்
ஆனால் தானென்ன
முத்தமிடுவதோ
காரித் துப்புவதோ
எதுவானாலும்
காற்றோடும் நிலத்தோடும் தான்
நகரும் வாழ்வு
அதிகாரம்
-----------------
காகமாகியவள்
சரிந்த தாழ்வார உச்சியில்
இருந்து
பறந்து போகிறாள்

வெய்யிலுக்கும்
நிழலுக்குமாக
சிஸ்டர்
சிஸ்டர்
அழைக்கும் குரல்களுக்கு
ஓடோடி வருபவள்
இரத்தக் கரைகளை
நாலு இழுப்பில்
பஞ்சாக்கி எறிபவள்
கைகளில்
சாவுகளுக்கான
ஊசிகள்
இல்லை
மகாவின் ஊஞ்சல்
----------------------

மாகா
கவிஞன்
அவ்வப்பொழுது
கீரீடத்தைக் கழட்டி
முடி அரிப்பை தேய்த்துக் கொள்கிறார்

கிரீடம் என்பது
அரசவைக்கு செறுக்கு
நம்ம
மகாவுக்கு
தெரியாததாயென்ன
மகா
கவிஞன்
இறங்கவே இறங்காத
அரச ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறார்
ஊஞ்சலில் ஆடியபடிதான்
காதல் கடிதமே எழுதுவார்
பாருங்களேன்
பதினைந்து வருடங்களுக்கு முன்னால்
மூன்று
நான்கு
ரோசாப் பூக்களை
முத்தமிட்டு வீசி அளித்ததில்
புதினைந்து வருடங்களாகவும்
பொக்கிசத்தைப் போல
பாதுகாத்து
வருகிறேன்
இது
அதிசயம்
அதிசயத்திலும் அதிசயம்
யாருக்கும் கிடைக்காத
பாக்கியம் அல்லவா
விழாநாட்களில்
வருடத்திற்கு
ஒரு முறை
அரசவைக்கு
காதலர்
மகா
கவி
தெய்வத்தைப் பார்ப்பது
வழக்கம்
நெடிய
வரிசையில்
கண்ணில் பார்ப்பதே
இப்பிறவிக்கு
போதுமானதாக
இருக்கிறது
மகா உதிர்க்கும்
ஒரு
வார்த்தை போதும்
அப்படியா
நல்லாருக்கியா
என
ஸ்ஸகானா ராகத்தில்
பாடும்
மகாவை
எத்தனை பிறவியிலும்
காதலிக்கலாம்
அதுவும்
மகா
கொடுத்த ரோசாபூவை
இன்னும்
கண்ணுக்குள் வைத்து
பாதுகாக்கிறேன்
இன்னும்
ஆண்டுக்கு ஆண்டு
சபரிமலைக்கு
இருமுடிகட்டிப் போவதுபோல
நாங்கள்
கூட்டமாக
எங்கள்
மகாவை
கவிஞனைப் பார்க்க
சென்றுகொண்டுதான்
இருக்கிறோம்
இன்னும்
இரண்டு நூறு நாட்களில்
அரசவைத் திருவிழா
விரதமிருகிறேன்
இந்த முறை
எப்படியும்
இன்னுமொரு
ரோசாப்
பூ வை
முத்தமிட்டு
தந்துவிடுவார்
எங்கள்
குல தெய்வமே
மகா
கவி தான்
எங்கள் வீட்டில் பூனையென்றால் ஸ்விஸ்



ஸ்விஸ் ஸ்விஸ்
ஸ்விஸ் ஸ்விஸ்
என்று அழைக்கும் பூனை
விட்டிற்குள் நுழைந்ததும்
வாகனச் சக்கரத்தை
உரசுகிறது
பின்பு
கால்களை உரசுகிறது
கூடவே மியாக்களை
உதிர்த்து உதிர்த்து
நீவிவிடவும்
கொஞ்ச வைக்கவுமான
பூனையின் அன்பு
நெகிழ்சியானது
சில்வர் தட்டுக்கு பக்கத்தில்
பாயின் மேல்
போர்வையின் மேல்
சுருண்டு படுக்கும் பூனையை
ஸ்விஸ் ஸ்விஸ் என்று
அம்மா அழைப்பாள்
ஸ்விஸ் ஸ்விஸ் என்று
பிரகாசினி அழைப்பாள்
ஸ்விஸ் ஸ்விஸ் என்று
தரணியும் அழைப்பான்
அவ்வப்பொழுது
ஸ்விஸ் ஸ்விஸ் என்று நானும்
அழைப்பேன்
பூவாக
இல்லாத
பூ
பூ
போலல்லவா
பூக்கிறது

பூவுக்கென
பூ வேசம்
எதற்கு தாயி
பூவே
வாழ்வினத்தின்
கபடமற்ற
ஜீவனன்றோ
வான் பூவின் வசந்தன்



வானத்தில் மலர்ந்த
ஒற்றைப் பூ
பறக்கும்
இந்த சொற்களைத்தானே
கூடுகிறது
கீழாக
துளிப் புள்ளி
மானுட வண்ணத்தில்
காணும்
தொலைவில்
நீ
ரசிகனானாய்
பாவம்
ஏதோ ஒப்பேறுகிறது
தரிசனம்
வான் பூவின்
வசந்தன்
பூ
பூவாய் திரிகிறான்
வான் வெளியில்
வரிக்கோடுகள்
அழகுக்கானவையல்ல
அளந்து
பசித்த புலியாகி
இரவுலிருந்து
பகலுக்கும்
வீட்டிலிருந்து
வீதிக்குமாக
இணைக்கும் ஓவியத்தில்
கலைஞன்
கவிதையாகும் தருணம்
இவைதான் அன்றோ
ஆகச் சிறந்த அழைப்பாயென்ன
உப்பு சப்பில்லாத ருசியாக வெறுமனே
சங்கடத்திற்கென
எட்டிப்பார்க்க
சின்ன வெள்ளாட்டுக் குட்டிகூட
மேயாது கிடக்கும்
செங்காட்டு புதர்களில்
மேலோட்டமாக திரிந்து நகரும்
வெய்யிலுக்குப் பின்னான
நகர்வலமானதே இந்நிழல்
என்னை வரச் சொன்னாய் வந்தேன்
ஏனென்று
நீயும்
சொல்லவில்லை
நானும் கேட்கவில்லை
பந்தய சலையில்
முந்திக்கொண்டு போன வெள்ளைக் குதிரை
இந்த பின் சட்டைக்காலரை
வாலில் சுருட்டி இழுத்தபோது குதிரை வீரன்
எனது இரு சக்கர வாகனத்திற்கு வந்திருந்தான்.
சிறிது நேரம் அந்தரத்தில் பதறிக்கத்திய படி
வாகனத்திற்கும் குதிரைக்குமிடையே
அலைந்து கொண்டிருந்த கவிதை கை கொட்டி
கை கொட்டி
சிரித்துக் கொண்டிருந்தது நானுக்கும் சொற்களுக்கும் அல்லாடி விழித்தபோது
குதிரையின் முதுகில்
அமர்ந்திருந்தேன்.
அழைக்கும் குரல்களுக்கு குதிரைக்காரன் ஆகிப்போன பொழுது
குதிரை கனைத்து நின்று நேரம்
தடுமாறி விழுந்த இடம்
எனது இரு சக்கர வாகனம்
குதிரைக்காரன்
வெள்ளைக் குதிரையை
ஓட்டிக் கொண்டிருந்தான்
அவரவர் வழி
அவரவர் இடத்திற்கு
அவரவர் பயணிக்க
எததனை எத்தனை மாற்றங்கள்
குருட்டு
உலகத்தில்
தென்றல்
ஒரே ஒரு
முடியை
மட்டுமே
அசைக்கிறது
இதனால் தானோ
விரல்களும்
ஆடுகிறது
கால்களுக்கு முத்தமிட்டு
வரம்புகளற்ற பாதையன்றோ
கை நீட்டி
அழைத்து செல்கிறது
கவிதை


அடர்ந்த அபூர்வ வாசனையை நுகர்தல்
சாத்தியமாகிறது
தொலைவாக நீர்போல வளைந்து நெருங்கி சற்றுமுன்
வசம் வந்து சேர்ந்துள்ளது
ஆயிரமாயிரம் கனவுகளை
உள்ளடக்கிய
அடைதலில்
எந்த ரசானுபவத்தை
தரப்போகிறது
எவ்வாறாயினும்
சாமியாடி போலவும்
கோழிகளின் குருதியை
அப்படியே
பசியன்புமாறாமல் ருசிப்பதில்
சிக்கல்களேயிருக்காது
என்றே துடிக்கிறது
முனைப்பு
தெரியாமல் செய்வதில்லை



யோக்கியமில்லாமல்
காரியத்தை ஆற்ற வேண்டுமெனில்
யாருக்கும் தெரியாமல்
இருக்க வேண்டும்

அது முடியாது
உள்ளங்கைகளில்
அரிக்கிறது
பணிக்கும் தொழிலின் கூரைகளுக்குள்
ஓராயிரம் கண்கள்
கனவு இதழி இடுப்பிலிருந்து
சுருக்குப் பை உருவ
ஆயிரம் புனைசொற்கள்
தூவி மண்டபங்களை
செய்யலாம்
வாங்கித் திங்க லட்சம் திசைகள்
அழைக்கலாம்
சவ்ந்தர்ய வரிகளை
கவிதைகளுக்குள்
பட்டவர்த்தனமாக
ஒட்டகங்கள்
ஓடுவது கண்களுக்குள்
தெரிகிறது
கண்களுக்குத் தான்
சொல்கிறேன்
ஒட்டகங்களின் தாகம் தானே
கவிதை
அதனால் தெரியாமல்
செய்வதற்கு
ஏதேனும் உண்டா
கண்களே
ஒளி சூழும் உலகிலும்
நிழல்கள் வாழ்கின்றது
அழியவே அழியாத
முகங்களை
எதற்குள் திணிக்கப் போகிறீர்கள்
பின் வாசல் அல்ல
அவசரம்
வேண்டாம்
மறந்தும்
முன் பக்கம்
வந்து விடப் போகிறீர்கள்
மறைக்க முற்படும்
சப்தங்கள்
அடங்கிவிடவா போகிறது
யாருக்கும்
தெரியவேண்டாம்
என்று

சாத்த சிரமமான
கதவை
ஏன்
சாத்த முயல்கிறார்கள்
நாடகம்




சிலருக்கு
நாடகங்கள்
அரங்கேற்றம் ஆகிவிட்டது

சிலருக்கு ஆகிறது
சிலருக்கு
தயார்
ஆகிக்கொண்டேயிருக்கிறது
எங்கெல்லாமோ சுழழும்
பலரது
வார்த்தைகளுக்குள்
ஓடும்
ஈரத்தின் நதி
இங்கே
பிஞ்சு பாதங்களை
நனைத்தல்லவா
ஓடுகிறது
பேருண்மை




தற்பொழுது தான் இளவெய்யில்
படர ஆயத்தம் கொள்கிறது
யாருடைய பற்றுதலுக்காகவோ
தெருமுனையில் காத்திருக்கும்
கீரையிலைகள்
பருவ தளதளப்புடன்
ஜொலிக்கிறது
சின்னஞ்சிறு குழந்தையின் கையிலிருந்து
தவறிவிழும் மிட்டாயைப்போல
விழுந்து படரும் காலை
பேருண்மையாக
குப்பைகளின் மீதும்
உன்னதங்களின் மீதும்
பொழிந்து செல்கிறது