Saturday, August 10, 2013

செல்லாள் கதைச் சிந்து



செல்லாள் கதைச் சிந்து
 
(இளஞ்சேரலின் வெளிவரவுள்ள “தமபான் தோது“ தொகுப்புக் கதையான  “டியூப்லைட் சிறு கதை குறித்து)

சமீபத்தில் நான்காம் வகுப்பு மானவனான தங்கை மகன் “தரணிஷ்“  என்னுடைய கை கடிகாரத்தை உடைத்திருந்தான். விசயம் தெரியாமல்

கடிகாரத்தை யார்உடைத்தார்கள்?  சிதறிக்கிடந்த இண்டு சிறு துண்டை எடுத்தவாறு  கேட்டேன். “அண்ணன் தான் எடுத்துக் கொண்டிருந்தது“ என்று அம்மா சொன்னார் முன்று நாட்களுக்கு பின் மாலை வேளை ஹோம் வொர்க் வரைந்து கொண்டிருந்த வேளை மகள் பிரகாசினி எதேச்சையாக சொன்னதிலிருந்து தான் தெரிந்தது தரணி தான் உடைத்திருக்கிறானென்று

மனதிற்குள் ஆச்சர்யம் தான் ஏற்பட்டிருந்தது

தரணியிடம் கேட்டேன் எப்படியடா பின்னால் உள்ள மூடியை கழட்ட முடிந்தது? தாத்தா கழட்டிக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன் கழட்டும் போது கீழே விழுந்த்தால் சங்கிலியும் உடைந்ததாக சொன்னான்.

அது முற்கள் சுழலாத உபயோகப்படுத்தாத பழைய  கடிகாரம் 1990-ல் அப்பா  மில்லுக்கு சென்று கொண்டிருந்த பொழுது.எனக்கும் எனது தங்கைக்கும் டைட்டான் ஷோரூம் அழைத்துப்போய் வாங்கிக் கொடுத்திருந்தார். கடிகாரத் திற்கான அழகுகளை தேர்வு செய்தது எங்களது விருப்பமாக இருந்ததால் நான் தேர்வு செய்தது பெண்கள் அணியும் சிறிய வகை கடிகாரம்.
யாருக்குமே விருப்பமில்லாமல் குறைகளை சொல்லிக் கொண்டிருந்தனர். நண்பர் வட்டாரங்களிலும் சரி வீட்டிலும் சரி சிலர் கேலியும் கிண்டலுமாய் பரிகசித்த போதிலும் எனக்கு அதில் தான் முழுவிருப்பமும் மாறவேயில்லை. கிட்டத்தட்ட 5 அல்லது 6வருடங்களுக்கு மேலாக அதைத்தான் அணிந்திருந்தேன். சொல்லப்போனால் அந்தக்கடிகாரத்திற்கு ப்பிறகு இப்பொழுது வரை எனக்கு எதுவும் நிலைத்ததுமில்லை விரும்பியதுமில்லை. அணிந்துகொள்ளும் பழக்கமுமில்லாமல் போய்விட்டது.

எந்த சூழ்நிலையிலும் குப்பையாக தொலைந்து போகாது இப்பொழுதும் ஒரு மூலையிலேனும் அது கண்களில் தட்டுப்பட்டுக்கொண்டேதான் இருந்து வருகிறது. கண்களில் மட்டுமல்ல ஞாபகங்களிலும் தான்

அந்த கடிகாரம் பெரும் விலைஉயர்ந்த ரகம் அல்ல  ஆனால் அந்த கடிகாரத்தின் கண்ணாடியின் உள்பகுதியில் பதியப்பட்டிருந்த அந்த பெயர்தான் மிகவும் பிடித்தமாக ஒற்றைக் காரணமாக இருந்தது.

அது ஒரு பெண் பெயர். அந்தப் பெயரிலுள்ள ஈர்ப்பு என்னை அவ்வளவு பாதித்திருந்தது. அந்தப் பெயர்தான் “சிந்து“  

முழுதும் வெள்ளை நிறம் கொண்ட இடத்தில் மெலியதாய்  சிவப்பு வர்ணத்தில் கூட்டெழுத்தில் எழுதப்பட்டிருந்தது “சிந்து“ மிக அழகானதாய் இருந்தது. பக்கத்து வீட்டுப் பெண்ணோ, பக்கத்த வீதிப் பெண்ணோ, இந்தப் பெயர் கொண்டவலில்லை.ஆயினும் அந்தப் பெயரின்மேல் அவ்வளவு பிரியத்திற்குக் காரணம் டைரக்டர் கே.பாலசந்தரைச் சொல்லலாம் அல்லது நடிகை சுகாசினியைச் சொல்லலாம்.
சிந்து பைரவி படத்தில் கேரக்டரில் சுகாசினியின் பாவம் அவ்வளவு பொருத்தமாக இருந்தது. உணர்த்தவியலாமல் உணர்த்ததுடிக்கும் இயலாமைக்குள் தவிக்கும் அழுகையும் புன்னகையும் வாட்டமும் அந்தப் பாத்திரத்தை மேலும் மேலும் எனக்குள் கனக்கத்தொடங்கின.
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்கு தாய் தந்தை யாரோ
விதியோடு நானாடும் விளையாட்டப் பாரு
விளையாத காட்டுக்கு வெத போட்டதாரு

போன்ற வரிகளுக்குள் சுகாசினியின் பிரமாதமான வெளிப்பாடு என்றே எனக்குள் வலியோடு அதிரவைத்தது. அதே போல பாலைவனச்சோலை படத்தில். சுகாசினியின் உச்சரிப்புபாவத்தில். “எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் அது எதற்கோ“

போன்ற வரிகள் மனதிற்குள் அழுத்தம் கொண்டன. இப்படியான பெண்கதாபாத்திரங்களின் வலி “சிந்து“ஒரு ஓவியத்தைப் போலவோ அல்லது ஒரு கவிதையைப் போலவோ என்னுள் நிலைத்திருந்தாள்.

தொண்ணூறுகளின் இறுதிவாக்கில் சிங்காநல்லுர்ர் வரதராஜபுரம் பாதையோர வாரச் சந்தையில் புத்தகங்களை கடைவிரித்த பெட்டர்மாஸ் லைட் வெளிச்சத்தில் எதையேச்சையாக வாங்க கிடைத்த புத்தகம் ஒன்றை என் வாழ்நாளில் மறக்க இயலாத அனுபவம். 3 ரூபாய்க்கு வாங்கிய அந்த புத்தகம். சிவரமணி, ரேவதி கவிதைகள்நிறைந்த சின்னஞ்சிறிய தொகுப்பு.     
அந்த புத்தகத்தின் வலிமையென்பதை வெறும் சொற்களால் நிறைவுசெய்ய இயலாதவை. இலங்கை கவிஞர்களான சிவரமணி புரடசிகர கவிதைகளைக் கொண்டிருந்த அழுத்தமான கவிதைகள் இருப்பினும் என்னுள் பதிநத அல்லது நிலைத்த கவிதையென்பது அவரது இருதிவரிகள் தான். 23 வயதா அவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர்எழுதிய வரிகள்.
“கைக்கு எட்டும்வரை எனது அடையாளங்களை அழித்து விடுங்கள்.
எரியும் நெருப்பில் காற்றில்“ என்பது தான்  
தனது உடலை நெருப்பால் அழித்துக் கொண்ட ஒரு மனுஷி அவர்
தமது ஒட்டுமொத்த நம்பிக்கைகளின் மூடத்தனத்திற்கு அந்தவரிகள் சவுக்கை சுழற்றுகின்றன.

அதே போல ரேவதி விடுதைலகான புரட்சிகர போராளியாக அவரது கவிதைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. அவர் என்ன ஆனார் என யாருக்குமே தெரியாத தகவல்களாக இன்னொரு மனுஷியின் சோகம் எனது நெஞ்சை அதிரச் செய்தன.

கடந்த மாதம் கோவையில் மருத்துவர் கோவி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் குட்டி ரேவதி தமது   இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் அதன் கசப்புகள் குறித்தும் தமது அனுபவங்களை பேசியது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்திருந்தது

கவிஞர்சிவகாமி, மற்றும் சில தோழிகளோடு இணைந்து. சங்கமம் என்கிற பெயரில் பெண்களின் இயக்கமாக  தமிழகம் முழுதும் ஆறு லட்சம் பெண்களை ஒன்றிணைத்து மாபெரும் இயக்கமாக உருவெடுத்து ஆயத்தமாகும் நேரம் தலைமைக்கான இடத்திற்கு தேர்ந்தெடுக்கும் வேளை தாழ்த்தப் பட்டவர்கள் தலைமை ஏற்க இயலாது என்கிற சாதீய குழப்பங்களால் சிதறிப்போன இயக்கத்தின் வலியை தமது உழைப்பின் நிதர்சனத்தை பகிர்ந்து கொண்ட அவரின் பேச்சு மிக முக்கியம் வாய்ந்ததாக அமைந்த்து.

உழைப்பாலும் செயல்பாடுகளாலும் முன்னிற்கும் எழுத்துக்களுக்கும் கவிதைகளுக்கும் எப்பொழுதுமே உயிர்ப்புண்டு. தன்வியர்வையிலிருந்து, தன.உலகத்திலிருந்து, தம் தோல்வியிலிருந்து, புறந்தள்ளப்படும் வலியிருந்து, விலக்கி வைக்கப்பட்ட தாரங்களிலிருந்து, இந்த சமூகத்தின் மீதான அனபிலிருந்து, எழுத்து மனதிற்கு,கவிதை மனதிறகு, தத்தமது உடம்பின் சிறு துண்டை எழுத்தாளனுக்கும்,கவிஞனுக்கும், பரிசளிக்கும் தருணமே சிறந்த படைப்பாகும்.    

செல்லாள்!  எத்தனையோ கதை மாந்தர்கள்  உலவும் கதை உலகில் .செல்லாள் பாத்திரம், மிகவும் நுட்பம் வாய்ந்த உணர்வுகளை, சந்திக்கிற தருணங்களில். தவிக்கும் பரிதவிப்பை, புரிந்து கொண்ட முதியபெண்மனிகளின் வாயிலாக வாழ்வின் இழிநிலையை புரிந்து கொள்ளும் .தமக்குள் கேள்விகளை விடையாக்குகிற நுட்பம் கொண்டவளாக இக் கதையில் முன்நிற்கிறாள்.  தமது புது வாழ்க்கயை துவங்கும் புது பெண்ணாக வாழ்க்கையை துவங்குமிடத்திலிருந்து கதைக்கான களம் துவங்குகிறது. எத்தனையோ எதிர்பார்ப்புகளுக்கிடையில் தாம் வாழ வந்த இடம் புறம் போக்கு நிலமான குட்டைப் பகுதி.

தனித்து ஒண்ட இடமில்லாத மக்கள் நெருக்கமாக வாழும்பகுதி. இந்தக் கதைக்குள் செல்லும் போதே இடம் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் புதர்மண்டிய பூச்சி புழுக்கள் தேங்கி நிற்கும் நீர் என பின்புலக் காட்சிகள் வழி வாசகமனதை கதைக் களத்திற்கு அழைத்துச் செல்லக்கூடிய அருமையான  சொற்கள் எதார்த்த நடை. .   உதாரணமாக

காலைக் கடன் முடித்த குழந்தைகள் இவளின் புதுப்பெண் அலங்காரம் வளையல்கள், நகச் சாயம், கொலுசுகளின் சத்தம கலைந்த கொத்து மல்லிழகையின் பிரிந்த நால் புரள்வதை வேடிக்கை பார்க்கிறது கைகளில் விரல்களில் மருதாணியால் வரையப்பட்ட மலர்க் கோலங்களை தொட்டுப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள் தாய்மார்கள்.

அக்காவரங்கா“ பறந்து ஓடியது வாசலில் பன்றிக் குடும்பம் மொலு மொலுவென வந்து உப்பு தண்ணீர் வாளியை சாண மலையை ஆட்டுப் பட்டிகளை முகர்ந்து விட்டு இடது புறமாக உள்ள குட்டையின் நீர்த் தேக்கத்தி0றகுப் பாய்ந்த்து.“

“பக்கத்து வீட்டுக் குழந்தைகள் இரண்டு நாள் பழக்கத்தில் செல்லாள் அணுசரணையைக் கண்ட பிரியத்தில உள்ளே வர முயற்சிக்கிறது. அம்மாள்  யேய் போங்கடி சூரப் புள்ளைகளா நாளைக்க வாங்க விரட்ட முனைய அவள் அக் குழந்தைகளை உள்ளே அழைத்துக் கொண்டு போய் தனக்க்க் கொடுத்து விட்ட பனியாரக் குடத்திலிருந்து பலகாரய்களை எடுத்துத் தர குழந்தைகளின் கண்களில் பதிய வெளிச்சமும் சந்தோசமும் தெரிகிறது. அம்மாள் “ஏய் செல்லா இப்படி குடுத்து பழக்கி வெச்சன்னா வம்பாயிரும்  போகாதுக அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்““             .

இளஞ்சேரலின் தனிப்பட்ட ஆளுமைக்கு இந்த (லேண்ட் ஸ்கேப்) விவரிப்புகள் மற்றும் மேட்டுமைக் கதாபாத்திரங்களுக்கான தனித்தனி மொழி யென நிகழும் காட்சிகளை கண் முன்னால் இயக்கவைக்கும் எழுத்திற்கு ஒரு சல்யுட்.

 ஓட்டு வங்கிக்காக பயன்படுத்தும் சாதிய மையத்தை அடிப்படையாக்க் கொண்ட ஆதிக்க மனப்பான்மை மனிதர்களை சார்ந்து பிழப்பை நடத்தக் கூடிய    நெத்திக் குட்டைப் பகுதி மக்களின் அன்றாட வாழ்நிலை போராட்டங்களில் நகர்ந்து செல்லும் நிலையை உணர்த்தக்கூடிய  கதைப்பிண்ணனி.

தமிழ் சிறுகதை உலகத்தில் நிச்சயம் முக்கியமான இடத்தை தக்க வைக்க்க்கூடிய சிறுகதைகளில் இளஞ்சேரலின் டியுப் லைட் சிறுகதையை தவிர்க்கமுடியாது

இந்திய மரபிலிருந்து மட்டுமல்ல சர்வதேச அரங்கில் நிகழ்த்தக் கூடிய ஸ்வீட்டி மொழியில் செல்மா லாகர் லெப், மலையாலத்தில் கிரேசி,

போன்ற பெண்எழுத்தாளர்களின் கதைபாத்திரங்களுக்கு இணையானவகையாக இளஞ்சேரலினுடைய கதைமாந்தர்கள் உலவிக் கொண்டிருக்கின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீட்டி மொழியில் எழுதப்பட்ட செல்மா லாகர்லெப்பின் “ஹாட்டோ“கதையை கா.நா.சு. மொழிபெயர்ப்பில் வாசித்தகதையை என்னுள் சிறுகதைக்கான மிகப் பெரும் வெளியை என்னுள் ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்தக்கதையை வாசித்து ஆணடுக் கணக்கிலாகியும் மறதியில் அழிந்து போன கதையாசிரியரின் பெயரை சமீகாலத்தில் தான் அறிந்திருந்தேன். அவரைப்பற்றி இந்த ஒரு சிறுகதையிலிருந்தே மிகப் பெரும் ஆளுமைக்கான பிம்பத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.

ஹாட்டோ எனும் துறவி ஆற்றங்கரையில்நின்றபடி கடும் தவம்புரிகிறான் மனித குலம் எல்லாமே நசிந்து ரத்த ஆற்றில் அழிந்து போக வேண்டும் என கடுந்தவம் புரிகிறான். வெய்யிலிலும் காற்றிலும் அவன் உருவம் கருத்துப் போகிறது. அவன் சூறாவளிக் காற்று அதிகமா அடித்துக் கொண்டிருக்கிறது. அப் பொழுது இடமில்லாமல் அவதிப் பட்டுவந்த குருவிகள் மரம்தானென்று எண்ணி இவன் கரங்களில் கூடு கட்டுகிறது. இதற்கிடையில் இவன் பசியால் மடிந்துவிடக் கூடாது என்று எண்ணிய மக்கள் பாலும் உணவுமாக ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி கதை நகர்ந்து கொண்டிருக்கும் தருவாயில் குருவிகளின் இனப் பெருக்க காலத்தையும் குஞ்சு கீழே விழுந்து விடாத பாங்கினையும் தாய் பறவைகள் இறைதேட போய்விடுகிற நிலையில் துறவியின் சின்னஞ் சிறு பறவைகளின் உலகத்தில் சஞ்சரிக்கிறான்  இவனது இறுக்கம் கொஞ்ம் கொஞ்சமாக இளகத் துவங்குகிறது.இறுதியில் தமது தவம் பழித்து விட கூடாது என மனம் மாறுகிற துறவியின் நிலையை மற்றும் வாழ்க்கை மகத்துவத்தை பிரதிபளிக்க கூடியதாக அமைந்திருந்தது.ஹாட்டோ சிறுகதை.

 செல்மா லாகர் லெப்பின் கதைக்கான களங்கள் “டியூப் லைட்“ சிறுகதையின் நேரெதிரான வெளியென்றாலும் அதற்க்கான அடர்தியின் உச்சமென இந்தக் கதையை ஒப்பிட முடியும்.

ஆடும் ஆட்டிவைக்கும் அக வெளிப் பாடுகளின் மனித மனம் வந்தடைய வேடிய இடை வெளி அல்லது தூரம என இந்த மையத்தைச் சொல்லலாம்.
அதேபோல மலையாத்தின் முக்கிய படைப் பாளர்களில் ஒருவரான கிரேசியின் பாறைகள. சிறுகதை மிக பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது தமிழில் ரவி இளங்கோவன் மொழி பெயர்த்திருக்கிறார். தளவாய் சுந்தரம் தொகுத்திருக்கும் இந்திய மொழிச்சிறுகதைகளின் தலைப்புக் கதையாக இடம் பெற்றருக்கும் சிறுகதை “பாறைகள்.“

கிருத்துவக் குடும்பத்தின் வழியாக இரண்டாம் பெண்ணான ஷீபா தனது அப்பா கிருத்துவின் அளவுகடந்த வெறியின் காரணமாக தேவாலயம்ஒன்றை நிறுவுகிறார். மேலும் தனது முதல் மகளான தீனாவை அத் தேவாலயத்திறகு பங்களிப்பாக கொடுத்து தனது வெற்றியை குடியால் கொண்டாடுகிறார்          .மகள்களின் வாழ்க்கையை நினைத்து வேதணைகொள்ளும் அம்மாவை அவமதிப்புக்குள்ளாக்குகிறார். இதனால் மனமுடைந்து போன ஷீபா தனது எதிர்காலத்தைப் பற்றிய பயம் மனதில் தொற்றிக் கொள்ள கிளார்க்-கம்-டைப்பிஸ்ட் வேலையில் சேர்ந்து கொள்கிறாள் அக்காளின் இளமையையும் அவளின் வாழ்க்கையையும் கண்டு மிகவும் மனவேதனைக்குள்ளாகிறாள்.

பணியிடத்தில் மிருதுளா என்ற ஒருத்தி தோழியாகிறாள். அவள் சதா தமது அப்பாவை உயர்வாக எண்ணி புகழ்பாடிக் கொணடிருப்பது அவளை தனிமைப் படுத்துகிறது. மேலும் தமக்கான எதிர்காலக் குழப்பங்களில் மனது தவித்துக் கொண்டிருக்கிறது. பாதைமணலில் நடக்கும் ஏதாவது ஒரு ஆணின் பாதச் சுவடுகள் மேல் கால்வைத்து நடந்து ஆசையில் மிதந்து கொண்டிருக்கிறாள். இதற்கிடையே மிருதுளா கல்யாண சேதி சொல்கிறாள் பிறகு அப்பாவை புகழ்ந்து கொண்டிருந்த இடத்தில் கணவணை இணைக்கிறாள் தனது முதலிரவு ரகசியஙகிலிருந்து தினமும் பகிர்ந்து கொள்கிறாள்.
பின்னர் தனியாக மிருதுளாவின் உடல் மாற்றங்களை கண்டு உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கிறாள். தமது இளைய மார்ப்புகளை மறைத்துக்கொள்ளகிறாள் .ஒரு கட்டத்தில் தமக்கு மனக்குழப்பம் அதிகமாக மருத்துவரை சந்திக்க முடிவெடுக்கிறாள். கருத்தகாளையாக வரச் சொன்ன மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பால் மார்பகங்களின் மீது பரிசோதித்துவிட்டு இறுதியாய் பொருத்தமில்லாத ஒரு பறவைக் குரலில் உன் உள் மனதிற்குள் பெரிதாக பாறைகள் வளர்ந்திருக்கின்றன எனகூறுகிறார் .அவள் கண்களுக்குள் இருள் நிறைய வெளியேறுகிறாள்“ .

பாறையைக் குறியீடாக கொண்ட இந்த சிறுகதை தனி ஒரு பெண்ணின் உலகத்தை அதன் எதிர்பார்புகளின் தோல்விகளை நிராகரிப்புகளால் பாதிக்கும் மன உலகத்தை பேசுகின்றன.

டியுப் லைட் கதையும் பாறைகள் கதையும் பெண்ணின் எதிர்பார்ப்புகள் குறித்து ஏமாற்ற மடைகிற பாத்திரங்களாக இணைந்திருக்கின்றன.
கதை மாந்தர்களின் பின் புலங்கள் மாறியிருப்பினும். சமூகம் என்பது தள்ளி நிற்கக் கூடிய வெளியாக இருந்து கொண்டிருக்கும்நிலையை கேள்விகளுக் குள்ளாக்குகிற தொனியை இணைத்திருக்கிறது இக்கதைகள்.

ஹட்டோ என்கிற துறவியினுடைய மொத்த உலகம் குரூஙகளால் நிறைந்தமனித சமூக்தை வெறுக்கத் துவங்கிய துறவி சின்னஞ் சிறு உயிர்களின் மௌனங்களோடு கலந்து உயிரின் மகத்துவத்தை அடையக்கூடிய மிகப் பெரு தத்துவ ஞானத்தை இயற்கையோடு உணர்ந்து கொள்ளக் கூடிய காட்சிப் படிமங்களால் முன் நிற்கிற உச்ச நிலையை கனிந்து  வலியுறுத்துகிறது. அந்த இரு கதைகளுக்குண்டான வினாக்களும் அதிர்வுகளும் ஹாட்டோ கதைகளோடு பாகமாக இணநைதுவிடும் சாத்தியத்தைக் காண இயலும்.

எனது வசிப்பிடம் குட்டை சார்நத இடத்திற்கு அருகில் தான் இருக்கிறது சிறு பருவம் குட்டைபகுதியின் இடங்களால் நிறைந்திருக்கிறது. மழைகாலத்தில் வசிப்பிடம் முழுதும் தண்ணீர் நிரம்ப ஊர் மக்கள் பள்ளிக் கூடங்களில் தஞ்மடைந்திருப்பதை அளவில்லாது கண்டிருக்கிறேன். நான் முதன் முதலாகப் பார்த்த தலைப் பிரட்டைகள் அந்த குட்டை நீரில் தான்.  நான் பார்த்த பாறைகள், கல்லுக்குழிகள்,நீர்ப் பச்சை பாசனம்.என மனமெங்கும் நிறைந்திருக்கும் காட்சிகள் இவ்விடத்திலிருந்து தான், நான் கேட்ட தவளைகளின் கீதங்கள் உலகில் வாழ்நாள் முழுவதிலும் எங்கு கேட்க இருந்தாலும் அது இதன் குரல்களின் வழியாகத்தான். இப்படி வாழ்வோடு ஒன்றியிருக்கிற நினைவுகளை செல்லாளின் கதாபாத்திரங்களின் வழியாக வழிந்தோடுகிற ஈரம் டியுப்லைட் சிறுகதையின் கதைகளாமாக உருக் கொண்டிருப்பதாக உணரமுடிகிறது.

வெளிச்சமே உன்னை வணங்குகிறேன். காலம் காலமாக எங்களை வன்மத்துடன் தீண்டிவிட்டு பொறுப்பை தந்து முடக்கி வைத்து விடுகிறாய் இப்பொழுது நீ போய்விடு ஒவ்வொரு கல்லாக எறிய ஆரம்பிக்கிறாள். என இளஞ்சேரல் வரிகளின் தொடர்சியாக

செல்லாள் எறிகிறஒவ்வொரு கல்லும் வெளிச்சத்தை நோக்கி ,சமூகத்தை நோக்கி,மனித மனங்களை நோக்கி,வாசக மனங்களை நோக்கி பாயும் என்கிற                வலியோடு முடியும் இந்த நிலையிலும்

அம்பை மொழிபெயர்த்த நினைவலைகளில் நெளிந்து கொண்டிருக்கிற கவிஞர் “விம்மி“யின் “எப்போதும் சோர்வதில்லை சிந்தி மொழிக் கவிதை ஒன்றை இந்த இடத்தில் பொருத்துவது சிறப்பாக இருக்கும்.
இந்தக் கட்டுரை முடிவுறும் தருவாயில்“
இக்கணம் தொலைக் காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் செய்திக்குரல் கவனத்தை திசை திருப்புகிறது. ஒரு நிமிடயோசனையில் கவனித்தேன். ஆமாம் “சிந்து“அதே பெயரைத் தான் உச்சரிக்கிறது. உலக பேட்மிட்டன் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த இண்டணனிடம் இந்தியாவைச் சேர்ந்த சிந்து அதிர்ச்சித் தோல்வி. என இன்றைய நிகழ்வை செய்தியாளர் அறிவித்துக் கொண்டிருந்தார்.

“சிந்து என்றாளே சோகம் தானா“? மனதிற்க்குள் சிரித்துக் கொண்டு,  சிந்து என்பது சுகாசினியா? அல்லது சிந்துநதியின் மீது காதல் கொண்ட  விம்மியா? சிந்து என்பது பேட்மிட்டன் வீராங்கணையா? அல்லது சிந்து என்பது செல்லாளா?  என்கிற ஒப்பீட்டளவில் டியுப் லைட் கதையின் நாயகி செல்லாள் தான் தற்பொழுது பொருத்தமானவள் என்கிற மனதோடு கவிதைக்குள் செல்லலாம்.
அந்தச் சிறு கூடு
அதில் நெளிந்து வளைந்த வைக்கோல் குச்சிகள்
மிகவும் முயன்று
இவற்றை நான் அமைத்தேன்
உன்னுடைய ஓர் அடியில்
எல்லாவற்றையும்
வீழ்த்தியாகி விட்டது கீழே
ஆனால் காற்றே !
நான் சொல்வதைக் கேள்
நீ எத்தனை தான் வேகமாக வீசினாலும்
எத்தனை முயன்றாலும்
நான் வீட்டை மீண்டும் கட்டுவேன்
நீ கலைத்துக் கொண்டே இரு வேண்டு மானால்
நான் மீண்டும் மீண்டும் கட்டுவேன்
நீ கேள்விப் பட்டதில்லை போலும்
பட்சிகள் கூடு கட்டச் சோர்வதில்லை



Monday, August 5, 2013

 ஞாபகங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும்   கழுத்து மணிகள்
(-இளஞ்சேரலின் –“தம்பான் தோது“ சிறுகதை குறித்து எனதுபார்வை)

“தம்பான் தோது“ சிறுகதையை இளஞ்சேரல் என்னிடம் வாசிக்க தந்த அந்த நேரம் அவரோடு சேர்த்து இரவும் குவிந்திருந்தது. நான் வேலையை முடித்து சக்கையாக திரும்பிய இரட்டைபுளியாமரம்  அண்ணாச்சி கடையில் வாசலில் ஒரு கோல்டு ஃபில்டரில் தொடங்கி முன்று கோல்டு .பில்டர் நான்கு பொட்டுக் கடலைப் பருப்பிகளோடு முடிவடையும்போது. சில சம்பவங்கள்-இலக்கிய உரையாடல்கள்-பயணிக்க வேண்டிய எல்லைகள்-அதன் வரையரைகள் என தொடர்ச்சியான உற்சாகச் சோர்வில் மனம் தனிமைப் பட்டிருந்தது.
வழக்கமாக இருவரின உரையாடலகளின் முடிவில் எப்பொழுதுமே விரும்பும் எல்லைகள் என்பது எங்கோ வெகு தொலைவில்உணரும் புள்ளிகளாகவே உணரும் தருணங்கள் தான் எஞ்சியிருக்கின்றன.
இதனுள் தருக்கங்கள்-விவரிப்புகள்-இழப்புகள்-யோசனைகளென விரிந்துசுருங்கும் நாட்களைப் போல வழக்கமாக தொடரும் சந்திப்புகள் தானென்றாலும்  “தம்பான் தோது“ என்கிற படைப்பின் ஆதர்சனங்களில் ஊடாடுகிற வாய்ப்பு என்பது தான் குறிப்பிடுவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.
இக் கதையில் முக்கியமான “தம்பான்“ முருகன்“ என்ற இரு கதா பாத்திரங்களின் பிம்பம் சம வயதை ஒத்திருப்பதாகிறது என்பது தான். இதுகூட மிகவும் நெருக்கமான விசயமாக்கூட அமைந்திருக்கலாம் என்பதும் என்னுள் மிஞ்சிய பதிலாக எடுத்துக் கொண்டேன்.
அதனால் தானோ என்னவோ கதாபாத்திரங்களின் உரையாடல்கள் .மற்றும் வாழ்வியல் சித்திரங்கள் எல்லாம் பார்த்திருக்கிற பழக்கப் பட்ட காட்சிகளாக  ஞாபகங்களாக மனதிற்குள் நிழலாடு கின்றன.
பொதுவாக கதைக்களத்தில் உலவும் ஏதாவது ஒருகதாபாத்திரங்களின்வழியாக ஒரு காலத்தை உணர்வுகளை விடைகளை மீட்டுக்கொண்டுவரும் வலிமை என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. அப்பாத்திரங்கள் பேசப்படுகிற உணர்வுகள் வாசகன் மனதில்உலவிச் செல்லும் அழுத்தங்களில் தான் புதிய புதிய வழித்தடங்களை உருவாக்குகின்றன.அல்லது அதற்கு காரணமாகவும் அமைகின்றன இந்தஊடுருவல்களுக்கானவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய சாரம்சம் தான்   மிகச் சிறந்த ஒரு  சிறுகதையின் உயிரோட்டமாக இருக்க முடியும். இந்த அழுந்துதல்களின் வினையே .இந்த பதிவுகள்.
மனம் நிறைத்திருக்கும் மௌனங்களை எழுத்தாக்கும் முயற்சியில் ஓரளவேனும் நிறைவுறும் தருவாயில் தான் தமக்கான இறுக்கத்தை கொஞ்சமாவது இறக்கி வைக்க இயலும் என்கிற முயற்சி தான் காரணமாகவுமாகிறது.

கிட்டத்தட்ட எழுபத்தைந்து அல்லது எண்பதுகளின் நிறைநத மனிதர்கள் சொந்த ஊரின் மண்வாசம் கரும்புக் காடுகள் மக்காச் சோளக் காடுகள் மசால் காடுகள் விளைந்த இருகூரின் நிலபரப்புகள் மேலும் மிக முக்க்கியப் பகுதியான சந்தை அங்கு கூடும் விவசாயிகள் விறபனையாளர்கள் இடைத் தரகர்கள் காய்கரிகள் மற்றும் வெளி ஊரிலிருந்து இரவோடு இரவாக வரும் மாட்டு வண்டிகள் பயணிக்கும் மாடுகளின்  கழுத்து மணி ஓசைகள் என அத்தனை திசைகளும் உயிர்த்துக் கொண்டிருந்த ஊரின் முந்தைய பக்கங்களில்  விளையாடிய மைதானங்கள்  ஏரோப்பிளேன் காடுஎன பெயர் பெற்ற பசுமை மற்றும் செம்மண் வரப்புகள் நிறைந்த அன்றைய கால நில இயக்கங்களில் தோய்ந்த எனது சிறு பருவம்  பழைய நண்பர்கள் அவரவர்களின் மொழி யென ஊர் பேசும் அனைத்து உணர்வுகளும் விரிந்த காலமறைப்பிற்குள் புதையுண்டு போன சிலபெறும் ஆத்ம நிஜங்களை அதன் பசுமைகளை மகிழ்வுகளை எதார்த்தங்களை இயற்கைகளை வாழ்வியல் உணர்வுகளில் தவிக்கவிட்டு  அனுபவங்களாலான நுட்பங்களை கதை வழியாக தெளித்திருப்பது இளஞ்சேரலின் உளப்புர்வமான சக்தியாக நிறைந்திருக்கிறது என்பது ஊர்சிதமாகிறது.
கதையில் மிக எளிதாக இளஞ்சேரல் குறிப்பிட்டுச் செல்லும் இரயில் தண்டவாளங்களில் பயணிப்பது பற்றியான குறிப்புகள் அற்புதமானது.  இரயில் தண்டவாளங்களில் நடந்து விளையாடாதவர்கள் என யாருமே இருக்க முடியாது  என்றே கூட சொல்ல்லாம்.
அதே போல “பிறவிச் சாபம்“ என்கிற சாதிய பிளவுகளை அதன் சுயம் சார்ந்த மறைமுகங்களை அல்லது உணர்வுகளையும் கூட
“அவனுக்கொன்று என்றால் ஊர் தன் குடும்பத்தாரை அழித்துவிடுவார்கள் என்பதையும் அவன் அறிந்தேயிருந்தான்“
தொலைந்து போன நண்பனைத்தேடும் நோக்கில் மனதில் தோன்றும் எண.ணமாக வடித்திருக்கும் ஒரு வரியில் சாதியத்தின் ஆழ விசத்தை குறித்த நுட்பங்களை போகிற போக்கில் சொல்லிப் போவது கதையாசிரியனின் பலமான கூர்மையை காட்டுகிறது.

மீண்டும் மீண்டும்  இயற்கைசார்ந்த பந்தங்களை நாம் குறிப்பிடுவதற்க்கான நோக்கம் என்கிற வகையில் சொல்ல விளைவது என்னவென்றால்  இன்றைய சூழலில் நமது கால்களுக்கு கீழிருந்து நம்மை நாமே உன்னிப்பாக கவனிக்கத் துவங்க வேண்டிய அவசிய நிலைமைக்கு கட்டாயமாக்கவேண்டியிருக்கிறது.


உழைப்பின் வாசனைகள் மொழிகள் விளையும் தானியங்களில் மணக்கும் நிலங்கள் அவை சார்ந்த தொழில்கள் சந்தைகள் விற்பனையகங்கள் வாக்கு சுத்தம் என்பதைப்போலான நிதர்சனங்கள் விளையும் அப்பட்டமான புதை சொற்களை உயிர் பெற்ற காலம் என பதின் பருவ காலங்களைச் சொல்லலாம் .

அன்றைய மண்சார்ந்த மனிதர்களை நொய்யலாற்றின் ஈரத்தோடு சிறு பருவ வாழ்க்கையை சுவைத்த காலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதைப் போல இன்றைய நிகழ்கால சூழல் பெரும் வசந்தத்தை இழந்திருக்கின்றன.

இன்று பல தரப்பட்ட மனிதர்கள் வெவ்வேறான மொழிகள் வெளி மாநில மனிதர்களால் பிறந்த ஊர் நிரம்பிக் கிடக்கின்றன. சொந்த ஊர்காரர்கள் யார்? யாரென முகம் மறந்து போன நிலையில் த்த்தமது உலகத்தை எதிரெதிரே கடந்து கொண்டிருக்கும் தற்போதைய நேரத்தில்.
முழுக்க முழுக்க பெரு நகர சொகுசிற்குள் பழக்கப் பட்டுவிட்ட உடம்பு. பருத்திகளும் பஞ்சாலைகளும் அழிந்து கணிணியும்- அலைபேசியும்- எரி பொருளுமாய் திரியும் இயந்திர வாழ்க்கைக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டுவிட்டது கட்டாயமாகிப் போனது.
இன்றும் எனது ஊர் பெருநகரத்திற்கான வசதிகளாக மேலும் திடப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதனின் சாட்சிகளாக இரண்டு பெரும் ராட்ஜச பாலங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் 80 சதவிகித வேலைகள் முடிவடைந்துவிட்டன. உயிர் பெற்றுக் காண்டிருக்கும் இந்த பாலத்திற்காக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இரட்டைப் புளிய மரங்களை உயிரோடு சாய்த்துவிட்டு அதன் வாழ்விடத்தின் மீது தான் புதிய பாலம் உயர்ந்து கொண்டிருக்கிறது.
இப்படி ஊரின் குறிப்பிடக்கூடிய நினைவுச் சின்னங்கள் இழந்த நிலையில்
பெட்ரோல் டீசல் வாடையிலும் போக்குவரத்து நெரிசல்களிலும் இழந்து போன சிறுவர்களாக விளையாடிய மைதானங்களின் சக நண்பர்களை படிமமாகிப்போன அந்த மென்மைகளை தேடிக் கொண்டிருக்கும் பரிதாப வாழ்க்கைக்குள் தள்ளபட்டிருக்கிறோம் எனபது தான் பேருண்மை.
மேலும் மகிழ்ந்த பருவங்களின் சாட்சிகளாக உடனிருந்த பாச்சான் மரங்கள்-கொட்டமுத்துச் செடிகள்-போன்ற அடையாளங்களும் இன்று அழிந்து போங்விட்டன. இந்த மரங்களின் மீதான அக்கறைகள் எத்தனை மனங்களுக்குள் அழுந்திக் கொண்டிருக்கும் என்றால். வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
நொய்யல் பரிமளித்திருந்த காலத்தைப்போலவே எல்லா ஞாபங்களும் அடையாளமில்லாமல் சாட்சிகளில்லாமல் மாறிப் போயிருக்கின்றன.
இப்படி எதார்த்த வகையிலான.நடைமுறை மனிதர்களாகவே வாழ்கிற வாழ்ந்த “தம்பான்“ “ முருகன்“போன்ற உருவ வழியாக பின் பதின் பருவ நட்புகளை அதன் ஞாபகங்களை பின் சங்கிலியாக இழுத்துச்செல்லும் பலம்.“தம்பான் தோது“ சிறுகதையில் சாத்தியமாகியிருக்கிறது.
இந்தியமரபு அல்லது இந்திய மொழிகளுக்கு இணையாக தமிழ் சிறுகதை பரப்பில் அடித்தட்டு மக்களின் வாழ்வு நிலைகளை பிரதிபலிக்கிற பின் நவீன தள வகை கதைகளாக இளஞ்சேரலின்  “அம்பாரைப் பள்ளம்“ “சக்திவேல் முருகன் காவடிப்பண்டு“ “கிழக்கு மோனம்“போன்ற கதைகளை குறிப்பிட முடியும்.
 தாத்தாவும் பேரனுமாய்வேறுபடும் காலத்தை தலைமுறை இடைவெளிகளை தமது குலத்தொழிலான  எலி வேட்டைக்கு செல்லும் அனுபவங்ளை வித்தைகளை கற்றுக் கொடுப்பதும் உரையாடல் வழி பேரன் வேறுபடுவதும் பின்பு மோதிக்கொள்வதுமாய் தொடரந்துகொண்டிருக்கும் காட்சிகளுக்குள் பாலங்களின் வழியாக பிழைத்துக்கொண்டிருந்த பலங்குடிகளின் வாழ்வுநிலை அதன் காட்டுப்பகுதிகளின் அடர்த்தி நிறைந்த இடையுருகள் மற்றும் விலங்குளின் குரல்கள் என காட்சிகளாய்விரிந்து செல்லும் அற்புதம் “அம்பாரை பள்ளம்“சிறுகதையில் அவருக்கு சாத்தியமாகிருப்பதை குறிப்பிட்டுத்தானாக வேண்டும்.
அதே போல விளிம்பு நிலை சார்நத மனிதர்களின்வாழ்கையோடு கலந்திருக்கும் இசைக் கலைஞர்களின் சூழலைக்குறிக்கும் அவர்களின் த்த்தளிப்புகளை அவர்களின் கோபதாபங்களை வட்டார மொழிகளை பதிவுசெய்திருக்கும் “சக்தி வேல் முருகன் காவடிப் பண்டு“சிறுகதையையும்.
கிராமம் சார்ந்த பிண்ணனியில் விரியும் காலம்  மேலும் பாலியல்தொழிலாளியாக அலையும் பெண்ணின் ஆங்காரங்களை அவளின் கொடுர செயல்ளை வெறியோடு ஒரு ஆணோடு மோதி கொலையில் வெற்றியிடும் போர்ச்சூழலை தன் நடையின் இயல்பில் திகிலாய் அலைத்துச் செல்லும் “கிழக்கு மோனம்“ போன்ற அரியவகை சித்திரங்களாக அவரது கதைஉலகம் விரிவடைந்திருக்கிறது.
இப்படியான பல மாறுபட்ட புதிய வடிவங்களை கதைகளை தமிழச்சூழலுக்கு  நிறைவுதரும் வகையில் “தமபான் தோது“ மேலும்ஒரு இடநிறைவைத் தரும்.என்பது திண்ணம்..   .