Friday, March 21, 2014

உயிர் பேசும் மலர்



உயிர் பேசும் மலர்

பாதங்கள்
மண் பட்டவுடன்
எம் மணப்பெயரை
உணர்வாயாக

வெய்யிலை அருந்தச் செல்லும் முன்
இந்தக் குயவனுக்கு
கடன்படத் தொடங்கிவிட்டாய்

தாகம் தணிக்க

உயிர்பேசும் மலர் ஒன்றை
மண் குவளையில் பதித்து
பரிசாக அனுப்பியிருக்கும்
வெப்பக் காற்றில்

கோடை மலர்களை தரிசிக்க
வாய்ப்பிருக்கிறது

விற்பனைத் துறையின்
பீடத்திலிருந்து ததும்பும்
கிழக்குரல் கூவ

வயதின் விதியே

மென்மை நெய்த
கீழ் சட்டை நுணியின் முனையில்
கண்ணாடிக் கண்களை
சரி செய்துகொள்

தட்டுப்படாத பருவத்தில்
புத்தம் புதியதாய் பார்

மாய மகுடிகளுக்கு அசையாத
சிறு புற்றுக் குடிகளை

Wednesday, March 5, 2014

ஓசைகளுக்குள் படிந்திருக்கும் இந்தச் சொற்கள்


 ஓசைகளுக்குள் படிந்திருக்கும் இந்தச் சொற்கள்


எதிர் பார்க்கவேயில்லை

இவ்வளவு விரைவில் உணரும்
தருணம் வாய்த்திருக்கிறது
வெண்முடிகோதும் ஆணவத்திற்கு

விட்ட குறையொன்று
எந்தப் புள்ளியிலிருந்தோ
வேறெங்கிருந்தோ 
தொடங்கியிருக்கிறது
முதல் உதிர்வுச் சோதனையை

மறந்த முகங்களைத் தேடும்
அவசரங்களுக்குள்
பரபரப்பாகியிருக்கும் வேளையில்

பாதுகாகக்கப்பட்ட
அரசவைச்சுவர்களிலிருந்து
சின்னஞ் சிறிய கற்கள்
வீழ்ந்து விடத் தொடங்கினாலும்

அதன் ஓசைகளுக்குள்
இந்தச் சொற்கள் படிந்திருப்பதை
மறுக்க வாய்ப்புகளில்லை

தெருவோரக் காட்சிகளில் விழாது
நிழலைக் கூட பத்திரப் படுத்தியிருக்கும்
குளிர் சாதன பதவிகளுக்குள்
ஓய்வுகளிலிருந்தாலும்

ஆதிக்கம் கொள்ளும் வெய்யிலின் வலைகளுக்குள்
ஏந்திக் காத்திருக்கும்
அந்த வர்ணங்களின் முகங்களில்
வழிந்து விடாதா ஈரம்

நாம் பார்க்க


நாம் பார்க்க


அனைத்தும் திட்டமிட்டபடி
நடக்கிறதா என்றோ
நடந்ததா என்றோ
சரியாக குறிப்பிட இயல்வதில்லை

யாராகிலும் ஒருவர்
யாருக்காகவோ
தமது நிழலை இழந்திருக்க

ரட்சிப்பவர்களின்
ஆதரவுகளாகவோ
அல்லது
எதிர்வுகளாகவோ

நிகழும் சம்பவங்களெல்லாம்
நாம் பார்க்க

எப்படியோ
எதற்காகவோ
இயங்கிக் கொண்டிருக்கிறது

இறுதிகளை எட்டாத
வெப்பத்தின் இடைவெளியில்

சில அதுகள் பறக்கிறது
சில அதுகள் மேய்கிறது

குருதி வாடையை சுற்றியுள்ள
எறும்புகள்
இரைக்காக சுமந்து செல்லும்
வலிகளைத்தான்

எப்பொழுதும் ஒருநாள்
சேமித்து நகர்கிறது