Thursday, January 24, 2013

இப்ப என்னடா பிரச்சனை என்றான்
நண்பன்

அதைத் தானடா இத்தனை நாளாய்
உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்
என்றேன்

சொன்னதையே தானடா
திரும்பத் திரும்ப
சொல்லிக்கொண்டிருக்கிறாய் என்றான்

அதையே தானடா எனக்கும்
மீண்டும் மீண்டும்
சொல்லத் தோன்றுகிறது என்றேன்

வேறு ஏதாவது பேசடா என்றான்
அது தானடா தெரியவில்லை
என்றேன்

சரி யோசிப்போம்
இருவரும் காதுகளை ஒரு கணம்
யோசித்தபடி
(அவன் தொட்டுப் பார்த்துக்கொண்டான்)
பாவம் அது என்ன செய்யும்
அது பாட்டுக்கு அது

எங்கு சுற்றினாலும்
ஆரம்பத்தையே வந்தடையும்
பரிதவிப்பில்
தப்பித்து விட்ட தாய் அவனும்
விலகிச் செல்கையில்

ஓய்ந்த பாடில்லை குரங்கு

அதற்கான ருசியை
அது தானே தேடவேண்டும்

மீண்டும் பழைய
மரத்திலேயே தொற்றிக் கொண்டு விட்டது

கால காலமாய்
உடையாத விளக்கை ஏற்றித் திரியும்
கனல் உயிர் வேகாத போதத்தில்
உருவம் குலையாது காணும்
மறைவிடங்களில்
ஒரே ஒர மென் சிரிப்பு உதிர்த்திருக்கிறது
கடல் அல்ல
சிற்றோடை
சில மரங்கள் பச்சையங்களை தெளித்திருப்பது
ஆழ்ந்த ரகசியம்
ஒரு சிற்றொடையென்றால்
குழப்பமும் தெளிவும் தானே
புகையிட்டு நகர்த்த முடியும் என
அந்த ரகச் சாத்தியங்களெல்லாம்
செல்லாத சூத்திரத்தில் அலசுங்கள்
மாயையேதான்
பாலாடை மனம்பரப்பும் இடங்களில்
விலகஇயலாத கட்டுகள் தெரிகிறதா
தடையென்பது கடுமையானது தானல்ல
வாசம் போன்ற காற்றில் கலந்த
மாய ரகம் தானென
முடிவுகளுக்குள் உறுதியிட்ட
பயணிக்கும் விசை
சுற்றதான் இடறுமோ இடறாதோ
பொடி கணத்திலேனும்
தெளிவென்பது வேகத்திலல்ல
காணும் காட்சிகளிலல்ல
நுகர்தல்கள் தாம்
அதாவது
அப்படித்தான் சொல்லவரும் ஞானம்
புலிகளா ஓடிக்கொண்டிருக்கிறது வரிகளில்
சிறு மண்ணாங் கட்டியும் இல்லை
இங்கு வேசங்கட்டிக் கொண்டாலும்
பொய்யுலகம் வெரு மான் கோ க்கள் தான்
தெளிந்த புள்ளிகளில் முளைக்கும் இடம்
நந்தவனங்களே அல்ல
யாருடைய வனம்
யாருடைய புல்கள்
வயதுகளின் வாடகைகளைக் கணக்கிட்டு
விளையாண்டு முடிக்கும் காலத்தில்
கரைந்து போய்விடும் நிலை
தெற்கத்திக் காற்றின் அந்தரத்தில்
என்றேனும் கண்டிருக்கும்
வெள்ளைப் பஞ்சென்ற பறத்தல்களில்
திசையெல்லாம்  இல்லை
திசைகளாய் இருக்குமோ
பொது வென்பது பொதுவில் தானென்பதை
பொதுவாகவே பொதுவென்கிறேன்
இலைகூட அல்ல
துளியாய் இறங்கிக் கொண்டிருந்தாலும்
சருக்கல்களில் விழுவதோ விழுக்காட்டுவதொ அல்ல
ஆழத்தைஅல்லவோ
மீட்டுக் கொள்வதற்க்கான பொறி








 

Tuesday, January 22, 2013

வெறிச் சோடிய வீதி
சுயமிழந்த அமைதி
சூழ்ந்திருக்கும் இந்த நேரம்

வெய்யிலும் இல்லை
கருக்கலும் இல்லை

மிதமான ஓய்வில் இருக்கிறது
சீமை ஒடுகள்

புதியதாய் வேய்ந்த காலத்தில்
அப்பாவின் இளமைத் தோற்றம்
ஞாபகத்திற்கு வரும்

கூடவே

ஆறுமுக மாமாவும் தான்

கூரையின் மேலிருந்து
இடறி விழுந்து

நடக்க இயலாமல் போனது
அப்பொழுதிருந்து தான்

காரணமேயில்லாமல் இப்படி
சூழ்ந்த தனித்த இருப்பின்

யோசனையில் அசைய

பக்கத்திலிருந்த தண்ணீர் சொம்பை
சாய்த்திருக்காமல் இருந்திருந்தால்

மேலும் ஒரு வருத்தம் கூடாமல் இருந்திருக்கும்

சரி

 நனைந்த லுங்கியை
மாற்றிக்கொள்ள

இனி

அழுக்கு மூட்டையைத் தான்

திறக்க வேண்டும்

மேகா குட்டி


உச்சா
போய்விட்ட
மேகா குட்டிக்கு
ஒன்னறை வயசு

சிரிக்கிற சிரிப்பில்
எகிறாகவே நிறைந்த இடத்தில்

முத்து முத்தாய்
இரண்டே இரண்டு பற்கள்

பேத்தி

மேகா குட்டியிடம்

கடன் பெறவே
யாசித்துக் கொண்டிருக்கிறேன்

மேகா குட்டியும்
யோசித்த படியிருக்கிறாள்

ச்
.
சே...தி

என்று
தலையை சாய்த்தாள்

இப்பொழுது

நான்
மேகா குட்டியாகவே

இரண்டே இரண்டு
தெய்வப் பற்களில்
சிரிப்பாய்
சிரித்தபடியிருக்கிறேன்

அந்த

நகைச் சுவைக்காரனின்
செயல்களைக் காட்டிலும்

நகைச் சுவைக்காரனின்
கோபத்தைப் பார்த்தால் தான்

இந்த மேகா குட்டிக்கு

அவ்வளோவ் சிரிப்பு

Monday, January 21, 2013

மௌனத்திற்கான அதிர்வுகள்



மௌனத்திற்கான அதிர்வுகள்


எவ்வித குழப்பங்களும் இல்லை

வாடா மல்லி பூக்களுக்கும்
நந்தியா வட்டப் பூக்களுக்கு்ம்
சம்பங்கிப் பூக்களுக்கும்
செவ்வந்திப் பூக்களுக்கும்

வித்தியாசம் தானில்லையா

வேறுபாடு அறியாத வரண்ட
மண் மேடா மனம்

சிதறிக்கிடக்கும்
நந்தியாவட்டப் பூக்களுக்கும்
செண்டு மல்லிச் செடிகளின்

ஈரத்திற்குமிடையே

வெட்டுக் கிளியொன்று
தாவிக் கொண்டிருப்பதை

நெருக்கமாக இருக்கும்
செம்பருத்திப் பூக்கள் தான் உணராதா
இவற்றிலென்ன குழப்பம்




ஜன்னல்கள்


ஆடையை
புதுப்பித்திருக்கின்றன
எனது ஜன்னல்கள்

வெளி வண்டுகள் எல்லாம்
அங்கிருந்துதான்
நுழையுமென்று

 இந்த தோட்டத்து
பூக்களுக்குத் தெரியும்

கொஞ்சம்
அழகுத் திமிர்
அதிகம்
எனது மனப் பூக்களுக்கு

Saturday, January 19, 2013

பொய் மான்கள்

பொய் மான்கள்


கால்களை
விசை கொண்டு உயர்த்திப் பறக்க
விரைந்து கொண்டிருக்கும்

 மான்களின்
பதற்றத்தைக்  கண்டேன்
அதன்களின்  விழிகளில்

ஒரு கலைஞனின் கைவண்ணமே தான்

அப்படியே நிலைத்துவிட
நேர்ந்திருக்கிறது அவைகளுக்கு

எந்த தேவைகளுக்கான அறிகுறி

குரலற்ற மான்களின் பதற்றம்

ஓடாது ஓடிய படியே
கண்ட காட்சியில்

பொய் மான்கள் போலவேயில்லை
பொய்மான்கள்

இந்தப் பெயர்


இந்தப் பெயர்


தாமற்று
திசையெல்லாம்
திரிந்து கொண்டிருக்கும்
இந்தப் பெயர்

எங்கெல்லாமோ
சீரழிந்துகொண்டு கடைசியில்
நம்மிடமே வந்து சேர்கிறது

பல தரப்பட்ட அவமானங்களை
எப்படியெல்லாமோ தாங்கியபடி

நம்மிடமே வரும் இந்தப் பெயரை
எந்தெந்த விதத்தில் ஆற்றுப்படுத்துவது

எல்லையை கடந்த விட்ட அது

 ஒரு மசை நாயைப் போல
ரத்தம் சொட்டச் சொட்ட
எங்கெல்லாமோ ஓடிக் கொண்டிருப்பதாக

சமீப காலமாகத்தான்
ஒரு செய்தியாக கேட்க வாய்த்திருந்தது

பட்டயங்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன

பட்டயங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன


சிறு கரைகளை
அழிக்க வேண்டிய செயலம்மா

யாம்
ஆற்றவிளைந்தது

சிறு  பயிரும்
வாடிவிடக் கூடாதென்ற
கருணையே தான்

இவ்வளவு தொலைவை அடைந்திருப்பது

சரி
அதுவும் ஒரு
வியாதியோ
என்னவோ

எதுவாயினும்

நீ
சொல்லெடுத்து வரும் வீதிகளில்
எவ்வித இடையூறும் இல்லை

கொஞ்சம்
மெலிதான சலங்கை இசைகளும்
புகை போல் எழும்பும்

சில பூக்களின் வாசணைகளும் மட்டுமே
அவ்வப்பொழுது கமழ்ந்துவரும்

இந்தப் பாதையில்

கபடமற்றுக்கிடக்கும்
யாசகன் நான்

 நீ எறிந்துவிட்டுப் போன

2 பட்டயங்கள் மட்டுமே
மின்னிக் கொண்டிருக்கும்

இந்தப் பாத்திரத்தில்

நானாகவேதான் நிறைந்திருக்கிறேன்

Wednesday, January 9, 2013

குருவிகளின் குரல்கள்

குருவிகளின் குரல்கள்


சொத்தைப் பல்லுக்கெனஅம்மாவின் சிபாரிசுப்படி
ரெட் டூத் பவுடரைத்தேய்த்தக் கொண்டிருந்தேன்

வாசலின் முன்னால் இறங்கி
சிவந்த எச்சிலைத் துப்ப வேண்டியிருந்தது
சாக்கடையில்

வேலைக்கு புறப்படும் நேரத்தை கவனித்தபடி
வடக்குப் பக்கம் திரும்பிப் பார்த்தேன்

நடமாற்ற மற்ற வீதியின்முன்வீட்டுசுவரருகில்
இட்லி வியாபாரம் முடித்து
இரவு 11மணிக்கு தினமும் வரும்
தம்பதியர்களின் வெளுத்தநிற தள்ளு வண்டி
நின்றுகொண்டிருக்கிறது

அதற்கு பின்னால்
சலவை செய்து கொண்டிருக்கும்
இளம் தாயொருத்தியின் பரபரப்பு

அவளுக்கு பின்னால்
ரவி அண்ணனின் வாடகை வேன்
கோபத்தில் உள்ளதைப் போல
முக்த்தை திருப்பியபடி ஓய்விலிருந்தது

மீணடுமொரு முறை எச்சிலைத்
துப்பியபடி தெற்குப் பக்கம் திரும்பினேன்

ஆட்களற்ற பாதை உம்மென்றிருந்தது

எதிரெதிர் வீடுகளிலிருந்து
பாத்திர ஒலிகளாய்கேட்க்கும் வேளையில்

மா மா வெனகத்தியபடி
அலைபேசியை கைகளில் திணித்து
ஓடிப்போனான் “தரணி“ பொடியன்

அலை பேசியின் எதிர் முனையிலிந்த நண்பன்
எப்பொழுது டா பார்க்கலாம்

நீண்ட நாளாகிவிட்டதான புகாரையும்
சொல்லிக் கொண்டிருக்கும் வேளை

இடையே கிரீச் கிரீச் சென மெலிதாய்
ஒலிக்கும் ஓசையை கவனித்தேன்

என்னடா
குருவிகள் சப்தங்கள் போல் கேட்கிறதே என்றேன்

விட்டில் தானிருக்கிறேன் இங்கு தான்
குருவிகள் விளையாடிக் கொண்டிருப்பதாக சொன்னான்

விடைபெற்ற பொழுதிலும் ஒருவிதமான மகிழ்ச்சி
வேலைக்கு பறப்பட்டுவிட்டேன்

 செவிகளுக்குள் இனிமையாய் உலவிக் கொண்டிருந்ததென்னவோ

குருவிகளின் குரல்கள் மட்டும் தான்