Wednesday, February 24, 2016

காலையில் வழக்கமான பரபரப்போடு வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். எல்லாம் தயாராகி இரு சக்கர வாகனத்தை வீட்டிலிருந்து காம்பவுண்டிற்கு வெளியே தள்ளக் கொண்டு வருகையில் கண்ணில் பட்டது. ஒரு மகிழ்வான காட்சி. இப்படி ஒரு பறவை காலையை வரவேற்றால் யாருக்குத் தான் மனம் மகிழ்ச்சி கொள்ளாது.
சாலையில் முன்னின்று சிறு மண் மேட்டை எதிர் புறமான நிலையில் கொத்திக் கொண்டிருந்த அந்த மரங்கொத்திப் பறவை. எனது சப்தம் கேட்டு தலை சாய்த்து என் பக்கம் திரும்பிப் பார்த்தது.
நின்று விட்டேன். அப்படியே வாகனத்தை திரும்ப வீட்டிற்குள் இழுத்து சென்றுவிட்டேன்..சில நிமிடத்தில் சப்தமில்லாமல் காம்பவுண்ட் சுவற்றில் சாய்ந்து அந்தப் பறவையை கவனித்துக் கொண்டிருந்தேன்.அது எனது அருகாமையில் குழப்பமில்லையென்று முடிவுக்கு வந்து மீண்டும் அதன் பணியைத் தொடர்ந்தது.
மிகவும் சுறு சுறுப்போடு கொத்திக் கொண்டிருக்கும் பாங்கைப் பார்த்து மிகவும் பசியான அதன் சூழ்நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
திரும்ப வீட்டிற்குள் ஓடி பள்ளிக்கு என்னுடன் வர விருக்கும் தங்கை மகன் தரணியை சப்தமில்லாமல்.இருக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்திற்குப் பிறகு மெதுவாக அழைத்து வந்து அவனுக்கு மரங் கொத்திப் பறவையைக் காண்பித்தேன். இருவராக வருவதைப் பார்த்ததும் சிறு வட்டப்பறத்தலில் எதிர் வீட்டு மேற்கூரை ஓட்டின் வரிசையில் இடத்தை தேர்வு செய்து அமர்ந்தது.
கொஞ்ச நேரம் அப்படியே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். சிறு இடைவெளிக்குப் பின் அதன் பசியா அல்லது எங்கள் மீது நம்பிக்கையா தெரியவில்லை மீண்டும் .கோடு போடுவதைப் போல நேராக நிலத்தைத் தொட்டது. அதைப் பிடித்துவிடலாமா?“ என்று மிக மெதுவாக கேட்டான். வேண்டாம். என தலையசைத்ததும். அமைதியாக இருவரும் வேடிக்கை பார்த்தோம்.
ஆமாம் இது மரங்கொத்தி தானே? அப்புறம் ஏன் மண்ணைக் கொத்திக் கொண்டிருக்கிறது.என்று கேட்டான். அதனின் சோகத்தை விளக்க இயலாமல் பசிதான் வேறென்ன என்றேன். சரி போலாம் லேட் பண்ணாதீங்க என்று சொல்லியபடி புத்தகப் பையை எடுக்க உள்ளே ஓடினான்.
அது தன் அதிகப் பசிக்கு மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தது. இதெப்படியிங்கு வந்தது.என்று யோசித்தபடி பழைய மரம் இருக்கும் பகுதியைப் பார்த்தேன். எந்த அறிகுறியும் இல்லாமல் வானம் வெட்ட வெளியாய்த் தெரிந்தது. எதிர் வீட்டு வேப்பன் மட்டும் பாதி இலைகள் காக்கி உடுப்பகளை தரித்துக் கொண்டும் மீதி இலைகள் ஒப்பக்குச் சப்பாக கொஞ்சம் பச்சையைத் தொடுத்தும் இருந்தது.
இதற்கு முன்னால் மரங்கொத்திப் பறவையை எப் பொழுது பார்த்தேன்... ம் ....என்று யோசிக்கையில் தலைக்கு பாரம் ஏற்ற விரும்பாமல் அப்படியே அத் துயரத்தை பாதியிலேயெ விட்டுவிட்டேன்.
ஆண்டுகள் குறுக்கும் நெடுக்குமாக மணடைக்கள் ஓடிக் கொண்டிருந்தது.
அது சுறுசுறுப்பை குறைக்கவில்லை .அதன் உடலின் சீரான வர்ண்ணங்கள் அதன அழகை வடிவமைத்திருக்கிறது.
ஊசியென மண் குப்பைகளுக்குள் இறங்கும் அதன் அலகு.ஏறக் குறைய ஒன்னரை இன்ச். இருக்கலாம் என குத்து மதிப்பாக கணக்கிட்டுக் கொண்டது மனம்..
அடுத்து செல்வதற்கு கிளைகளில்லை..மீண்டும் எப்பொழுது பார்ப்போம் என்கிற கேள்விகளோடு தரணியின் அவசரத்திற்கிரங்க வீட்டிற்குள் சென்று விட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு வந்தேன் .காலியான அவ்விடம் உணர்த்தியது. அப்பறவை விடைபெற்றுக்கொண்டதை ..
யார் இடைஞ்சலுக்கு வந்தார்களோ தெரியவில்லை.
அதன் வருகை மனதிற்கும் இந்த காலைக்கும் மென் உணர்வைப் பரிசளித்திருந்தது.

No comments:

Post a Comment