Saturday, January 18, 2014

கடவுளின் ருசியை விட சாத்தானின் ருசி போதை தருபவை (“சாத்தான்களின் அந்தப்புரம்“ நறு முகை தேவியின் கவிதைத் தொகுப்பு குறித்து எனது பார்வை)


கடவுளின் ருசியை விட சாத்தானின் ருசி போதை தருபவை


(“சாத்தான்களின் அந்தப்புரம்“ நறு முகை தேவியின் கவிதைத் தொகுப்பு குறித்து எனது பார்வை)                                           

                                                      -- பொன்இளவேனில்


ஒரு பிரதான சாலைப் பயணத்தில். பலவிதமான பயணிகள் தினமும் பயணிக்கிறார்கள். அதில் ஒவ்வொருவருடைய பாதுகாப்பான பயணம் குறித்த நிலையின் தேர்வுகள் தான் நம்மை ஆச்சர்யப்படவும் வைக்கிறது.  அதி வேகமாக பயணிப்பதில் விருப்பமுடையவர்.. மித வேகமாக பயணிக்க ஆசைப்படுபவர் மிக மெதுவாக பயணிப்பது தான் பாதுகாப்பாக உணர்பவர், பாதையின் ஓரத்தில் பயணிப்பதில் தன் பாதுகாப்பை நிர்ணயிப்பவர், ஒரு சிலர் பேருந்து பயணம் தான் சிறந்த்தாக கருதுபவர்கள், ஒருசிலர் பாதைக்கான இடைவெளிக்கு தக்கவாறு நுழைந்து தமது இருப்பை கொண்டு செல்லக் கூடியவர், ஒருசிலர் தமது நேரத்திற்கு தக்க வாறு தமது பயணத்தை அமைத்துக் கொள்ள விருப்பமுடையவர், என பல்வேறு விதமான மனிதர்களை தினமும் கணடுவிடக் கூடிய பயணக்காரனின் அனுபவமே. இந்த சமூகப் பாதிப்பாக உணர்ந்து கொள்ளமுடியும்


இவ்வகையான மனிதர்கள் அவரவர்களுக்கான தேர்வுகளை அவரவர்களுக்கான கற்பனைகளைக் கொண்டு புனைந்து வைத்திருக்கிறார்கள். கற்பனையென்பது மிகப் பெரும் பலம் வாய்ந்தது என்பதில் சந்தேகம் எழுவதில்லை இந்த கற்பனைகளின் வீரியங்கள் தான், சாத்தான்களாகவும் கடவுள்களாகவும் முன்னிருத்தப் படுகின்றன. கற்பனைகள் என்பது மிகப் பெரும் முடிவுறாத அரண்மனைகளைப் போன்றது. அதற்கு எண்ணற்ற அறைகள் நிறைந்து கிடக்கின்றன். அப்படிப் பார்த்தால் சாத்தானின் கற்பனை ஆப்பிள் கனியாக அமைந்திருக்கிறது.


கற்பனைகளின் வழி கணக்கிலடங்கா விபத்துக்கள் நிகழ்கின்றன. ஆயினும் கற்பனைகளின் வீதிகளில் தான் கடவுளும் நம்மிடையே வசித்துக் கொண்டிருக்கிறார். இயற்கையை வழிபடத் துவங்கிய காலத்திலிலுந்து கடவுள் இந்த உலகத்தில் பிறந்து விட்டார். ஆனால் அழிவின் நிமிடத்திலிருந்து தான் சாத்தான் பிறப் பெடுத்திருக்கிறார். ஆயினும் இருவருமே கற்பனைகளுக்குள்ளிருந்து சாகாவரம் பெற்றிருக்கிறார்கள்.


பிரேதம்


அந்தப் பிரேதத்தை
எப்படியாவது
கண்டடைந்துவிட வேண்டும்
ஏனெனில்
மிக மிக விசித்திரமாக
அதற்குள் தான்
என் உயிர் இருக்கிறது.   (பக்கம்-34)


பல்வேறு வகையில் பல்வேறு மனிதர்களிடமிருந்து பல்வேறு கடவுள்களும், சாத்தான்களும் பிறந்தபடியே தான் இருக்கிறார்கள். இதில் தனித்தனியான பால் மரபு என்பதும் உள்ளடக்கமே. கடவுள்களின் ருசிகளை விட சாத்தான்களின் ருசிகள் கொஞ்சம் போதை தருபவை தான்.


இந்த உலகில் உண்மை மட்டுமே நிலவுமானால். மயான அமைதிதான் ஏற்படும்


.எனை பாதித்த இந்த வரிகள் எனது சிறு வயதில் செவிவழியாக வாங்கியதோ அல்லது எங்கிருந்தாவது வாசித்திருக்கிறேனா என்பது நினைவிலில்லை.


வெகுகாலமாக என் அகத்தில் படிந்திருந்த வரிகள் இங்கு நினைவுக்கு வருகிறது.. இந்த வகையில் ஏற்படும் பயங்கரமான அமைதிக்குள், மனித மனங்கள் பதட்டமடையத் தொடங்கிவிடும் பயத்தில் தான், சாத்தான்களின் மொழியாக புரளிகள் அதிக போதையுடனும் அதிக வசீகரங்களுடனும் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன் இதன் மாதிரிகளில் தான் கும்மாளமிட்டுக் கொள்ளும் பகட்டுகள் அதிக கவர்சிகளைக் கொண்டிருக்கின்றன.    


“ஆளும் கருத்துக்கள் யாவும் ஆளும் வர்கத்தின் கருத்துக்களே“ என்கிறார். காரல் மார்கஸ்.


முழுக்க முழுக்க தவிர்க்கவே முடியாத தத்துவமாக அன்றும் இன்றும்எப்பொழுதும் 

உயிர்வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த தத்துவத்திற் குள்ளிருந்து எண்ணற்ற கடவுகளை விட கூடுதாலான சாத்தான்களும் வசித்துக் கொண்டிருப்பதாகவே சாராசரி வாழ்க்கையின் அனுபவங்களாக கிடைத்திருக்கிறது.


நடைமுறையில் ஒவ்வொரு தனி மனிதர்களின் வீடுகளிலும் நாடக மய மாக்கிய, விளையாட்டுக் களமாக்கிய, சினிமாத் தனமாக்கிய, தற்போதைய தொலைக் காட்சிகளின் திரைத் துறைகளின் ஆதிக்கத்தில் புழங்கும் தாய்மொழி வடிவம் சிதைவடைந்து கொண்டிருக்கிறது. உயிர் மொழியை துடிக்கத் துடிக்க கொலை செய்யப்படும் அகோரத்தை ஆளும் வர்க்கத்தினுடைய நாகரிகமாக கருதி, தினம் தினமும் வீட்டுக்குள் நுழைந்து தாய்மொழியை கசக்கிப் போடும் காட்சிகளைக் காணாத கண்கள் என ஏதும் உண்டோ? இப்படி அப்பட்டமாக அரங்கேறும் நிலையைக் கூட மேற்க்கண்ட காரல் மார்க்ஸின் வரிகள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன.  

ஆளும் வர்க்கம் தமக்கான சுய கருத்துக்களை நியாயங்களாகவும் தர்மங்களாகவும் விளம்பரப்படுத்துவதும் அதற்க்கான அத்தனை அரசு இயந்திரங்களையும் உபயோகித்து அறிவியல் சார்ந்த ஊடகங்கள் சார்ந்து பத்திரிக்கைகள் சார்ந்து விளம்பரங்கள் மூலமாக தமக்கான நியாயங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் நுட்பங்களை உலகத்திலுள்ள அத்தனை சக்திகளும் பிரயோகப்படுத்திக் கொள்ளும் நடைமுறைகளை. அனைத்து மக்கள் உள்பட ஒவ்வொரு தனி மனிதனும் அறிந்து கொண்டிருக்கிறான்.


இந்த நடைமுறைகளைத் தான் தனி குழுக்களானாலும் சரி, சாதீயமானாலும் சரி, ஒவ்வொரு துறையிலும் ஆளும் வர்க்கம் என்பதான கருத்தை ஏற்றுக் கொள்கிற ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிற சம்பிரதாயங்களுக்குள் தான் நாம் தலையாட்டும் தவறை இயல்பாக செய்து கொண்டிருக்கிறோம். இதற்க்கான தனிப்பட்ட யோசனைகளை பற்றி யோசிக்க வலுவில்லாமல், ஆராய தகுதியில்லாமல், ஆளும் வர்க்கத்தின் நேர்மறையான கருத்துகளுக்கு ஒத்துப் போவதான பரிதாப நிலைகளையும் நாம் ஏராளமாக கண்டிருக்கிறோம்.   


ஒரு வகையில் கற்பனைகள் எங்கெல்லாம் தமது சக்தியை இழந்திருக்கிறதோ அத் திசைகளிலெல்லாம். சாத்தான்களின் கருத்துக்கள் தான் பரவலாக முளைக்கத் தொடங்குகின்றன. புனித்த் தன்மையை நிலைநிறுத்தப் போராடுகிற நற்குணங்களை கொண்ட கடவுள் மெய்மையின் அனல்களைக் காட்டி பதட்டமடைய போராடிக் கொண்டிருக்கிறார். எண்ணிலடங்கா பேராசைகளைக் கொண்டு போதைருசியேற்றி கடவுள்களை சாத்தான்கள் தோள்வியடைச் செய்துவிடுகின்றன. சாத்தான்களின் அந்தப் புரத்தில், வக்கிரங்களும் குரூரங்களுமே வளர்க்கப் படுகின்றன.


புரளிகள் மலிந்து கிடக்கும் வாழ்க்கையிது, குழந்தை பருவம் முதல் முதுமைப் பருவம் வரை மட்டுமல்ல மரணத்தையும் கூட அவ்விசத் தன்மைகள் விட்டுவைப்பதில்லை, இந்த விசயத்தில் பால் பேத மரபுகள் மட்டும் விதி விலக்கா என்ன?


என்னைப் பொறுத்தவரை புகழும்  நிராகரிப்பும், சரி சம்மாக கருதும் மனநிலையைப் பெற்றுருக்கிறேன். உழைப்பின், இயக்கத்தின் செயல்களில், ஒரு பரிபூரணமான நிம்மதியை அடையமுடியும். இந்த சுகத்தைத் தவிர வாழ்தலுக்கான சாட்சியங்கள், எதுவுமில்லை. என ஆசைப்படக்கூடிய மனதிற்குச் சொந்த முடையவனாக நிலைக்க பேராசைப்படுகிறவன் நான்.


புரளிகளின் வழித் தோண்றலை அல்லது அதன் பிறப்பிடத்தை இயலாமைகளின் கருவரைகள் தான் ஈன்றுகொண்டிருக்கிறது. இந்த நுட்பங்களை தேவி சரியாகப் புரிந்து கொண்ட பக்குவம் இந்த தொகுப்பின் வழி அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.


தம் வலுவிற்கேற்ப நீந்தும் மீன்களின் வாழ்க்கையை பரிசளித்திருக்கிறது வாழ்க்கை நிறை குறைகளற்ற அதனதன் வலுவிற்குள் அதனதனக்கான உலகம் மிக மிக அழகானவை. வாழ்நிலைக்கான உந்துதல்களை என்னளவில் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன். இந்த இடத்தில் வலு என்பது குறைகளை சுட்டுபவையல்ல அது இயல்பின் குணங்களாக வரையறுத்துக் கொள்ளலாம். இதில் தனித் தன்மை எனபது தான் மகத்தான இடமாகவும் கலையாகவும் உருப் பெரும் புள்ளி. இந்த மையத்திலிருந்துதான் அவரவர்களுக்கான மொழியும் சொற்களும் இணைந்து கைகூடும் வரம் முழுமை பெறுகிறது.   


கவிதை மேல் அதிக பிரியம் தரும் கணங்களில் மிக உன்னதமானதாக இதைச் சொல்லலாம். அதாவது தம் விரல்களுக்குள் சிக்கிக்கொண்ட கணங்களை அதன் ஸ்பரிசம் மீள்வதற்குள் கவிதையாகும் அனுபவம் கவிஞர்களுக்கு எப்பொழுதுமே அளவற்ற  ஆனந்தம் தரும் ஒரு வெளி. அக் கணம் மனம் முழுதும் அதி மென்மையாக விலாசிச் செல்லும் சுகமான தருணம்.என குறிப்பிடலாம்.

கண்ணாடிப் பூச்செடி


அதிசயமாய்க் கிடைத்த
கண்ணாடிப் பூச்செடி
என்று என் வீட்டில் இருக்கிறது.
சில சமயம் என்னைப் பிரதிபலிக்கவும்
பல சமயம் என்னைக் குத்திக் கிழிக்கவுமாய்
கவனமாக கையாள வேண்டிய பொருளானதால்
நேசிப்பதை விட சூட்சிப்பதே
பெரும் பிரயத் தனமாகி விடும்
கணங்களில் உடனடியாகத்
தீண்ட முடியாத தாரத்தில்
அலமாரியில் வைத்து விடுவதே
உசிதமென யோசிக்கையில்
புதியதாய் செம் பூவொன்று
பூத்திருக்கிறது அச் செடி                (பக்கம்-12)


தம் சொற்களின் மேல் குருதி படிய வாய்த்திருக்கும் இந்தக் கவிதைக்கான தருணம் சிறு வலியான கணமே ஆனாலும் தமது காட்சி அனுபவம் கவிதையாகி விட்ட அக் கணம் அக மகிழ்சியால் தான் நிறைவடைந்திருக்கும்.  அந்த வகையில்  நறுமுகை தேவிக்கு இந்தக் கவிதைக்கான கணம் இவ்வகையில் சாத்தியப்பட்டிருக்கும் என நம்புகிறேன் இந்த விதத்தில் எனது ரசனையின் அருகாமையை அடைந்திருக்கிறது எனபதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.


அதே போல கவிதையை வலிந்து செய்யபட்ட சிரமத்தையும் அதன் அழகு கைகூடாது தனித்து கிடக்கும் கவிதையாகாத வரிகளாக நிராதரவாய் ஒரு நிலா என்கிற கவிதையையும் குறிப்பிட வேண்டியது அவசியமாகவும் கருதுகிறேன்.


.பரிபூரணமான கலைப் படைப்பு சாத்தியப்படும் இடமென்பது. கவிஞனுக்கு புறச் சூழலே படைப்புக் களத்திற்க்கான சூழலை நிர்பந்தப்படுத்தினாலும் உருவாக்கினாலும் அதன் அகம் சார்ந்த அணுவிலிருந்து தான் உயிர்ப்பிக்கிறான். அதன் வழியே தான் இப் பிரபஞ்ச வெளிச்சத்திற்குள் உன்னத கவிதைகள் பிறப்பெடுக்கின்றன


கவிதை உணர்வின் ருசியை இன்னொருவருக்குள் திணித்து உணர்த்திவிட  இயலாது. கவிதை உணர்வு என்பது சுய மின்னலின் வெளிப்பாடு கவிஞன் தன் சுய ரசானுபவங்களின் வர்ணங்களை தனது வலியின் மீது தமது மொழியின் மீது தமது இறக்கைகளைக் கொண்டு தாமே வரைந்து கொள்கிறான்


தமக்காக சமூகத்திற்காக மறுக்கப்படும் கருணைகளின் உலகத்தை கேள்விகளாக சுட்டிக்காட்டுகிறார் கவிதைகளாக பதிவு செய்திருக்கிறார் நறுமுகைதேவி எளிமையான மொழிவடிவம் அவருக்கு சிறப்பூட்டுகிறது.


சுற்றங்களின் நல் ஆசிகளோடு இவருடைய தொகுப்பு சாத்தியப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும. கவிஞருக்கு அற்புதமான வாய்ப்பும் கைகூடியிருக்கிறது. மிகச் சிறப்பான முறையில் வடிவமைத்தும் பதிப்பித்திருக்கும் புது  எழுத்து மனோன்மணி அவர்களின் உழைப்பும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது..


ஆசிரியர் நறுமுகை தேவி
விலை  -60
வெளியீடு –புது எழுத்து
2- 205, அண்ணா நகர்,
காவேரிப்பட்டினம். 635112
கிருஷ்ணகிரி மாவட்டம்













No comments:

Post a Comment