Saturday, February 23, 2013

இலைகள்.............

இலைகள் துளிகூட அசையவில்லை
இந்த மாலை நேரம்
காற்றையே கூட காணோம்
எத்தனையோ சொற்களை
குரல்களை
அழுகைகளை
தேம்பல்களை
மிரட்டல்களை
கேட்டுக் கொண்டிருந்த பகல்களை தொலைத்துவிட்ட
சிறு மரத்தின் இலைகள்
மெர்குரி விளக்கின் மஞ்சள் கறைகளோடு
தனித்துக் கிடக்கிறது மௌனத்திற்குள்
அதன் உடலை அசைக்க கொஞ்சம் காற்றேனும் வரக்கூடாதா
கொஞ்சம் ஆசுவாசமடையட்டும்
அதற்கு
இந்த அந்திப் பொழுதாவது துணைபுரிந்தால் தேவலாம் தான்

பிரபஞ்சக் கவிதை


பிரபஞ்சக் கவிதை


வெத்து உறையாடல்களில் நம்பிக்கைகள் இல்லை
தர்க்கங்கள் நிறங்களை இழந்துவிட்டன
கேள்வியை குறை சொல்லவுமுமில்லை
ஆயினும்
உள்ளார்ந்த பதிலை உணர்த்திக்கொள்ள
ஒரு வாயப்பைக் கொடு

வா மயிலு வந்து அமர்
இதோ ஒரு கப் டீ
பருகு
பொறுமையாக ஒரு நிமிடம் கேள் ப்ளீஸ்
ஒரு நிமிடத்திற்குள் பதிலை கேள்

குரூபியோ குரூபனோ
கருப்போ சிவப்போ
அதுவல்ல முக்கியம்
எது எப்படியானாலென்ன
இந்தக் குரல் என்பதும் சுவாசம் என்பதும்
உண்மைதானே
வேண்டுமானால் பரிசோதித்துக் கொள்ளலாம்
இதிலென்ன இருக்கு
தொட்டும் கூட.....
மேலும்
இப் பிரபஞ்சத்தின் சிறு புல்லைப் போலான
ஒரு துளியே ஆனாலும்
இவ்விடத்தின் உயிர் தானே
பிரபஞ்சத்தின் உடலில் ஒரு முடியாகவேணும்
இருக்கட்டும் விடு
சுழலும் இப்பூமியில் உள்ளது தானே
இதன் எழுத்து
.இப்பொழுதும் சந்தேகமா
பிரதேசத்தின் ஒரு மூலையிலேனும்
அதனுள் உலவும் கவிதையைப் போலவேதான்
இந்த இருப்பும்
நன்றி

Friday, February 22, 2013

இரண்டு மாக்கா டாவுகளின் கதை


எதிர் பார்த்திராத அன்று இரவு
அலை பேசியில் அழைத்த
காவியத் தலைவனின்
வார்த்தைகளால் (சாரி) பூரிப்புகளால்
தமது தேவதை களைப்பற்றி தலைவனே
புகழ்பாடிக் கிறங்கிய அந்தக்கணம்
தாமுறுக மதி மயங்கி
மெய்யென்றே
இருக்கிற பணத்தை சுரண்டி எடுத்து
ஆளுக்கு ஒரு லிட்டர் எரி பொருளை நிரப்பி
வண்டிக் கிக்கரை உதைக்க
தலைவனின் ஏ.சி அறைக்குத் தலை தெரிக்க
பறந்த இரண்டு மாக்கா டாவு களின் பரிதாப கதையை
எத்தனைபேருக்குத் தெரியும்

விடிகாலை சந்தித்த வேளை
சரியில்லையோ என்னவோ
சிங்காரியைத் தொலைத்துவிட்ட
வருத்தமோ என்னவோ
அதிபவ்யமாய்
நகர்ந்த பெரும் பூசாரிபோல
ஓரிரண்டு சடங்குச்சொற்களோடு
தியானத்திற்கு சென்று விட்ட
காவ்யத் தலைவனின்மாற்றத்தை உணர்ந்த
 இரண்டு மாக்கா டாவுகள்
குழம்பி பின் தெளிந்த கோபத்தில்
இரண்டு கண்ணாடி டம்ளரைஉடைத்தும்
சுவற்றைக் குத்தி கரத்தை வீங்க வைத்துக் கொண்டதும்
இந்த மாக்கா டாவுகளின்
பிரதான கதைகளில் இதுவும் ஒன்று

பெரிய்ய குங்கும்த்தோட வந்த குருவம்மா
சொல்லிபுட்ட குறியில தா
காவியத்தலைவனின்
குட்டெல்லா வெளிபட்டுது

சோகத்துல மூழ்கிப் போன
இரண்டு மாக்கா டாவுகளு
ஒரு ஆப் பாட்டில் தவறிநொருங்கிய
வேதனையோடு ஊருக்கு திரும்புன கதைல
என்ன புரிஞ்சுதுன்னா
அம்மாவாசைக்கு போகாம
பவுர்ணமிக்கு போயிறுந்தா
காவியத் தலைவனு நிம்மதியா இருந்திருப்பாரு
சிங்காரிக்கும் கெட்ட பெயரு வந்திருகாதுங்கரேன்
சரிதானுங்களே 
 

Tuesday, February 19, 2013

இந்த அறையில்ஆசைகள்
குப்பைகளாக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறது
வேறு எந்த குழப்பங்களுக்குள்ளும்
சென்றுவிடாதீர்கள் அந்த நொடிக்குள்
நிச்சயம்
தெருவுக்குப் போய்விடும்
வெய்யில் பார்க்க

எந்ததேச இளவரசியின்
கடைக்கண் பார்வைகளுக்கோ
அரியாசணையிலேயே
முதுமையடைந்த ராஜாதி ராஜக்களின்
ஆரத்தழுவும் பட்டயங்களுக்கோ
அலைந்து கொண்டிருக்கும்
வரிசைகளில்
தேடிப்பார்த்து ஓய்ந்துவிட
காலம் என்ன செய்யும் பாவம்

இந்த தெருவோர வாசி தெருவோர
பேல் புரி கடைகளிலோ அல்லது
பொட்டிக்கடை வாசலிலோ
அல்லது தோளில் சுமந்த
சாக்குமூட்டையுடனோ சென்று கொண்டிருக்கும்
அனாதைகளின்
மொழிகளில் உளறிச் செல்பவன்
தேடி
என்ன லாபத்தை கண்டடையப் போகிறீர்கள்
அவனுக்கான வாழவு
அவன் கடந்து கொண்டிருக்கும் பாதை
அவ்வளவே

Wednesday, February 13, 2013


பூ போலவே இல்லை
இதழ்களின் தொகுப்பு
தனித்தனியாக
சிதைவுற்று கிடக்கிறது
அதன் நிறங்களும் தான்
அலங்கோலமாகியபடி
 ஒரு பகலைப்போல
சுருங்கிக்கொண்டு கிடக்கிறது
அடையாளங்களும்
இயல்பாகவேயில்லை அந்த முகம்
 தலைகுனிந்து போக
அருள்வாயாக
நாளோ கிழமையோ
போய்விடட்டும்
விட்டுவிடலாம்
சும்மாவாகவே

Monday, February 11, 2013

உஷ்...உஷ்....உஷ்....பாடல்



உஷ்.......உஷ்......உஷ்......பாடல்


உஷ்...உஷ்....உஷ்....பாடல்
ஏதாவது ஒரு கணத்திலேனும்
வந்து காதில் விழுந்து தொலைக்கிறது

அவ்வப்பொழுது
காட்சிகளைக் காட்டிக் காட்டி
உறுத்தச் செய்யும் சமிக்ஞையில்

பாதம் தைத்த வலிகொண்டு உதறி விலக

ஆறுதல்களாய்
அழைத்துப் போவதென்னவோ
கவிதைகள் தான்

பங்கமற்ற இயல்புக்கு வேறு வழி?

வாலுக்கு ஒரு பெயர்
முதுகுக்கு ஒரு பெயர்
தலைக்கு ஒரு பெயர்

மெது மெதுப்புச் சூட்டில்
ஆபரணத்து ஊஞ்சல்களில் ஆட

உஷ்...உஷ்....உஷ்......பாடல்
பட்டமரத்திற்கு எதுக்கு தாயீ

காலத்தின் அலகிற்கு
யார் தானென்ன
கொத்தும் துளி சப்தம் மட்டும் தான்
அந்த நாளுக்கு மிச்சம்


Friday, February 8, 2013

அப்படி என்ன தான் போட்டியோ

மத்தியத்தில்
துணையாகஇருப்தென்னவோ
நந்தியாவட்ட பூக்கள் தான்
ஆனாலும்
அப்படி என்ன தான் போட்டியோ


இடப்புறத்தில் குவிந்திருக்கும்
தங்கரளிப் பூக்களுக்கும்

வலப் புறத்தில் சாய்ந்திருக்கும்
ரோஜா சிவப்பு பூக்களுக்கும்
அப்படியென்னதான் போட்டியோ

தங்களது அழகுகளை
பொலிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது

நிறங்களாக உதிக்கிறதா
பூக்களாக உதிக்கிறதா

இடையில் நானல்லவா
சிக்கிக் கொண்டேன்

பூக்கும் முன்னே பூக்கும்
பூக்களுக்கான நிறத்தை
அடடா.....
எப்படிச் சொல்லி பூரிப்பது

பூவினால்
நிறத்திற்கு அழகா
இல்லை
நிறத்தினால்
பூவிற்கு அழகா

பூக்கள்
பூக்களாகவே இருக்க
நிறம் என
பிரிப்பதும் கூட அபத்தம் தான்

அழகு போல அள்ள
பூக்கள் பூக்களாகவே சிரிக்க
இங்கு நானல்லவோ
புலம்பிக்கொண்டிருக்கிறேன்