Monday, October 3, 2016

கவிதை


அடர்ந்த அபூர்வ வாசனையை நுகர்தல்
சாத்தியமாகிறது
தொலைவாக நீர்போல வளைந்து நெருங்கி சற்றுமுன்
வசம் வந்து சேர்ந்துள்ளது
ஆயிரமாயிரம் கனவுகளை
உள்ளடக்கிய
அடைதலில்
எந்த ரசானுபவத்தை
தரப்போகிறது
எவ்வாறாயினும்
சாமியாடி போலவும்
கோழிகளின் குருதியை
அப்படியே
பசியன்புமாறாமல் ருசிப்பதில்
சிக்கல்களேயிருக்காது
என்றே துடிக்கிறது
முனைப்பு
தெரியாமல் செய்வதில்லை



யோக்கியமில்லாமல்
காரியத்தை ஆற்ற வேண்டுமெனில்
யாருக்கும் தெரியாமல்
இருக்க வேண்டும்

அது முடியாது
உள்ளங்கைகளில்
அரிக்கிறது
பணிக்கும் தொழிலின் கூரைகளுக்குள்
ஓராயிரம் கண்கள்
கனவு இதழி இடுப்பிலிருந்து
சுருக்குப் பை உருவ
ஆயிரம் புனைசொற்கள்
தூவி மண்டபங்களை
செய்யலாம்
வாங்கித் திங்க லட்சம் திசைகள்
அழைக்கலாம்
சவ்ந்தர்ய வரிகளை
கவிதைகளுக்குள்
பட்டவர்த்தனமாக
ஒட்டகங்கள்
ஓடுவது கண்களுக்குள்
தெரிகிறது
கண்களுக்குத் தான்
சொல்கிறேன்
ஒட்டகங்களின் தாகம் தானே
கவிதை
அதனால் தெரியாமல்
செய்வதற்கு
ஏதேனும் உண்டா
கண்களே
ஒளி சூழும் உலகிலும்
நிழல்கள் வாழ்கின்றது
அழியவே அழியாத
முகங்களை
எதற்குள் திணிக்கப் போகிறீர்கள்
பின் வாசல் அல்ல
அவசரம்
வேண்டாம்
மறந்தும்
முன் பக்கம்
வந்து விடப் போகிறீர்கள்
மறைக்க முற்படும்
சப்தங்கள்
அடங்கிவிடவா போகிறது
யாருக்கும்
தெரியவேண்டாம்
என்று

சாத்த சிரமமான
கதவை
ஏன்
சாத்த முயல்கிறார்கள்
நாடகம்




சிலருக்கு
நாடகங்கள்
அரங்கேற்றம் ஆகிவிட்டது

சிலருக்கு ஆகிறது
சிலருக்கு
தயார்
ஆகிக்கொண்டேயிருக்கிறது
எங்கெல்லாமோ சுழழும்
பலரது
வார்த்தைகளுக்குள்
ஓடும்
ஈரத்தின் நதி
இங்கே
பிஞ்சு பாதங்களை
நனைத்தல்லவா
ஓடுகிறது
பேருண்மை




தற்பொழுது தான் இளவெய்யில்
படர ஆயத்தம் கொள்கிறது
யாருடைய பற்றுதலுக்காகவோ
தெருமுனையில் காத்திருக்கும்
கீரையிலைகள்
பருவ தளதளப்புடன்
ஜொலிக்கிறது
சின்னஞ்சிறு குழந்தையின் கையிலிருந்து
தவறிவிழும் மிட்டாயைப்போல
விழுந்து படரும் காலை
பேருண்மையாக
குப்பைகளின் மீதும்
உன்னதங்களின் மீதும்
பொழிந்து செல்கிறது